| ADDED : ஆக 16, 2024 08:38 PM
சென்னை:விவசாயிகளின் பிரச்னைகளை தீர்ப்பதில், தி.மு.க., அரசு அலட்சியம் காட்டுவதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:கள்ளக்குறிச்சி மாவட்டம், கரடிசித்துார் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்ற விவசாயி, தன் நிலத்திற்கு அப்பகுதியில் இருந்த ஏரி தடத்தைப் பயன்படுத்தி வந்துள்ளார். ஆனால், காலப்போக்கில் ஏரி தடம் தனியாருக்கு கிரயம் செய்து தரப்பட்டு விட்டது. இதனால், விவசாய நிலத்திற்குச் செல்ல பாதையில்லாமல் தவித்து வந்த சக்திவேல், 3 ஆண்டுகளாக அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்துள்ளார். அவரது கோரிக்கையை நிறைவேற்ற மறுத்த அதிகாரிகள், 'உன் நிலத்தை விற்றுவிட்டு போ' என்று கூறி அவமதித்துள்ளனர். அதைக் கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்த சக்திவேல், மன உளைச்சலை வெளிப்படுத்தும் வகையில், வீடியோ வெளியிட்டுள்ளார். அடுத்த சிறிது நேரத்தில், அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். விவசாயிகளின் பிரச்னைகளை தீர்ப்பதில், அரசு எந்த அளவுக்கு அலட்சியத்துடன் செயல்படுகிறது என்பதற்கு, இதுவே எடுத்துக்காட்டு. சக்திவேலின் இறப்புக்குக் காரணமான அதிகாரிகள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.