செங்கல்பட்டு: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அருகே விவசாய நிலங்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளும், அதற்கு பயன்படுத்தும் ட்ரோன்களும், பறவைகளை கடுமையாக பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே, உலகப் புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த ஏரி, 86 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில், 16 அடி உயரம் நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது. சரணாலயத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன. குறிப்பிட்ட பருவ காலத்தில் வரும் பறவைகள், கூடு கட்டி குஞ்சு பொரித்து, தங்கள் குஞ்சுடன் வந்த இடத்துக்கே திரும்பச்செல்கின்றன. இப்படி வரக்கூடிய பறவைகளுக்கு, சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் ஏராளம் என்கின்றனர், பறவை ஆர்வலர்கள். இந்த சரணாலயம் விவசாய நிலங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க ட்ரோன்களைப் பயன்படுத்தப்படுகின்றன. அவை பறக்கும்போது ஏற்படக்கூடிய மெல்லிய ஒலி அதிர்வுகள், பறவைகளை தொந்தரவு செய்கின்றன. சில பறவைகள், ட்ரோன்களை தாக்கிய சம்பவமும் நடந்துள்ளது. ட்ரோன் ஒலி அதிர்வுகளால் அச்சம் அடையும் பறவைகள், இங்கிருந்து இடம் பெயர்ந்து செல்வது, கூடுகளை கைவிட்டுச்செல்வதும் நடக்கிறது. பறவைகளின் இயல்பான செயல்பாடுகளையும், இந்த ட்ரோன்கள் மாற்றி விடுகின்றன.அது மட்டுமின்றி, விவசாய நிலங்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பரவி, வேடந்தாங்கல் ஏரிக்கும் வந்து சேர்ந்து விடுகின்றன. அங்கு காணப்படும் புழு, பூச்சிகளை உண்பதால் பறவைகள் உடலிலும் அந்த மருந்துகள் பரவி விடுகின்றன. இதனால் பறவை முட்டைகளின் ஓடு, மெல்லியதாக மாறி விடுகிறது. இது, இனப்பெருக்கத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.எனவே, பறவைகள் உணவு தேடுவதற்கு அவசியமான இந்தப் பகுதிகளில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதையும், ட்ரோன் பயன்பாட்டையும் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், காலப்போக்கில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பழைய முறைப்படி, ட்ரோன்கள் பயன்படுத்தாமல் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்க விவசாயிகளை நாங்கள் வற்புறுத்தி வருகிறோம் என பறவை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.