உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கர்நாடகாவால் மேகதாது அணை கட்டவே முடியாது உறுதியாக சொல்கிறார் துரைமுருகன்

கர்நாடகாவால் மேகதாது அணை கட்டவே முடியாது உறுதியாக சொல்கிறார் துரைமுருகன்

சென்னை:'மேகதாது அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த, தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் காக்க, தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது' என, அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட, கர்நாடகா எடுத்து வரும் முயற்சிகளை, தமிழக அரசு ஆரம்பம் முதலே தொடர்ந்து எதிர்த்து வருகிறது.இத்திட்டத்தை எதிர்த்து, தமிழக அரசு பல்வேறு வழக்குகளை தொடர்ந்துள்ளது. இவை அனைத்தும் நிலுவையில் உள்ளன.முதல்வர் பதவியேற்றதும், 2021 ஜூன் 17 மற்றும் 2022 மார்ச் 31, மே 26ல் பிரதமரை நேரில் சந்தித்த போது, கோரிக்கை மனு வழங்கினார்.

தீர்மானம்

அதில், மேகதாது அணை திட்டத்தையோ அல்லது வேறு எந்த திட்டத்தையோ மேற்கொள்ள, கர்நாடகாவுக்கு எந்த அனுமதியும் அளிக்கக்கூடாது என, மத்திய ஜல்சக்தி அமைச்சகத்திற்கு உத்தரவிடும்படி வலியுறுத்தினார்.நானும் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்து, மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தினேன். இந்நிலையில் கர்நாடக அரசு, 2022 - 23ம் ஆண்டு பட்ஜெட்டில், மேகதாது திட்டத்திற்கு நிதி ஒதுக்கியது தெரியவந்ததும், அதற்கு தமிழக சட்டசபையில் 2022 மார்ச் 21ல் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.அத்துடன் இத்திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என மத்திய அரசையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தையும் வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்ற பின், ஜூலை 5ம் தேதி மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்து, மேகதாது அணை திட்டம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, இத்திட்டத்தை நிராகரிக்குமாறு, அமைச்சகத்திற்கு உத்தரவிட வலியுறுத்தி மனு வழங்கினேன்.மேகதாது அணை தொடர்பாக, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது, தமிழக அரசு சார்பில் வலுவான வாதங்கள் முன்வைக்கப்படும்.

அனுமதி

காவிரி நடுவர் மன்றம், 2007 பிப்., 5ல் அளித்த இறுதி தீர்ப்பிலும், உச்ச நீதிமன்றம் 2018 பிப்., 16 அளித்த தீர்ப்பிலும், கர்நாடகாவில் மேகதாது அணைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.கர்நாடக அரசு இத்திட்டத்திற்கு, மத்திய நீர்வள குழுமத்தின் பன்மாநில நதி நீர் இயக்குனரகத்தின் ஒப்புதல், வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல், படுகை மாநிலங்களின் ஒப்புதல் பெறாமல் கட்ட இயலாது.கர்நாடக அரசின் இத்திட்டத்தை தடுத்து நிறுத்த, தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் காக்க, தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும், சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் தொடர்ந்து செய்து வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
ஆக 26, 2024 04:40

நாங்கள் மணல், கிரானைட் கொடுக்காமல் கர்நாடகாவால் மேகதாது அணை கட்டவே முடியாது. அதுனால எங்களின் தயவு அவர்களுக்குத் தேவை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை