ஈரோடு: ஈரோடு சென்னிமலை சாலை, கவுண்டச்சிபாளையத்தை சேர்ந்தவர் ராமசுவாமி, 82. இவர், தன் மகன் அருள்வேலுக்கு அரசு வேலை தேடினார். நண்பர் வாயிலாக, கோவை வடவள்ளியைச் சேர்ந்த தங்கவேல், 79, அறிமுகமானார்.அவர், பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக, 5 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். நம்பிய ராமசுவாமி தன் நண்பர், உறவினர்கள் என, 44 பேருக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வேலை கிடைக்கும் எனக்கூறி, 2 கோடியே, 20 லட்சம் ரூபாய், 2021 ஆகஸ்ட் முதல், 2023 ஜூலை வரை பெற்றுக் கொடுத்துள்ளார்.ஆனால், ஒருவருக்கும் வேலை கிடைக்கவில்லை. பாரதியார் பல்கலைக்கழகத்தில் விசாரித்தபோது மோசடி என, தெரிய வந்துள்ளது. இதுபற்றி ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ராமசுவாமி புகாரளித்தார்.போலீசார் அவரை கைது செய்ய முற்பட்ட போது, இதேபோன்று வேலை வாங்கி தருவதாக, 29 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், வடவள்ளி போலீசார் தங்கவேலை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தது தெரிய வந்தது. இதையடுத்து, கோவை மத்திய சிறைக்கு சென்ற, ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், 44 பேரிடம் பண மோசடி செய்தது தொடர்பாக, கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு நகலை அளித்தனர்.