| ADDED : ஜூன் 25, 2024 12:04 AM
சென்னை: “புயல் பாதிப்பை ஆய்வு செய்ய பெரிய அமைச்சர்கள் வந்திருக்கின்றனர்; நிறைய பணம் கிடைக்கும் என்று நாங்கள் ஓடினோம். ஓடிப்போய் பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை,” என, வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் கூறினார்.சட்டசபையில் அவரது பதிலுரை:சென்னையில் ஒரு தொகுதிக்கு ஒரு தாசில்தார் அலுவலகம் தான் உள்ளது. விரைவில் தாசில்தார், வி.ஏ.ஓ., அலுவலகங்களை அதிகரிக்க உள்ளோம். மக்கள் தொகைக்கு ஏற்ப அலுவலகங்களை வரையறை செய்யப் போகிறோம். இதுகுறித்த நல்ல செய்தி விரைவில் வரும். 'மிக்ஜாம்' புயல் பாதிப்பை ஆய்வு செய்ய, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வந்தார். நிவாரண நிதி அதிகம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். அவரை தொடர்ந்து திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்தார். பணம் வைத்துள்ள துறையை சேர்ந்த அமைச்சர் வந்ததால், நமக்கு நிறைய கொடுப்பார் என்று நினைத்தோம்.மத்திய அரசிடம் நாம், 37,907 கோடி ரூபாய் கேட்டோம். ஆனால், 272 கோடி ரூபாய் தான் கொடுத்தனர். பெரிய அமைச்சர்கள் வந்திருக்கின்றனர்; நிறைய பணம் கிடைக்கும் என்று நாங்கள் ஓடினோம்; ஓடிப்போய் பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. சென்னையில் உள்ள எம்.எல்.ஏ.,க்களை பார்த்தால், எனக்கு பயமாக இருக்கிறது. பட்டா கேட்டு தான் அவர்கள் என்னை சந்திக்கின்றனர். அமைச்சர் உதயநிதி தலைமையில் கூட்டம் நடத்தி, மூன்று விதமாக இப்பிரச்னையை சரிசெய்ய முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு கூறினார்.