சென்னை:நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகளின் நிலங்களில், திறந்தவெளி கிணறு, பண்ணைக்குட்டை உள்ளிட்ட பல்வேறு பணிகள் இலவசமாக செய்து தரப்படவுள்ளன. இதற்கு விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்.சிறு, குறு விவசாயி களின் நிலங்களில், மண்வரப்பு, கல்வரப்பு அமைத்தல், திறந்தவெளி கிணறு அமைத்தல், பண்ணைக்குட்டை அமைத்தல், பழமரக்கன்று நடுதல். மீன் உலர்கலம் அமைத்தல், மண்புழு உர குழி அமைத்தல், அசோலா உர தொட்டி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் இலவசமாக செய்து தரப்படவுள்ளன. இத்திட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயன்பெற விரும்பும் விவசாயிகள், வேளாண் விரிவாக்க மையங்களை அணுக வேண்டும். அங்கு தங்கள் பெயர், மொபைல் போன், விவசாய நிலத்தின் சர்வே எண், முகவரி உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என, வேளாண்துறை கூறியுள்ளது.
5,000 சிறு குளங்கள்
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 5,000 புதிய சிறு குளங்கள், 250 கோடி ரூபாயில் அமைக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளன. அதன் விபரம்: ஒரு கிராம ஊராட்சியில், குறைந்தது ஒரு புதிய குளம் உருவாக்கலாம். நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ள பகுதிகளில், ஒன்றுக்கும் மேற்பட்ட குளங்களை உருவாக்கலாம் ஏரி மற்றும் நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில், புதிய குளம் அமைப்பதாக இருந்தால், அப்பகுதி, 10 ஆண்டுகளுக்கு மேலாக, துார் வாரப்படாத பகுதியாக இருக்க வேண்டும். சமுதாய குளங்களை உருவாக்கலாம். ஆனால், புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளக்கூடாது புதிய குளங்களை உருவாக்கும் போது, அவற்றுக்கு தண்ணீர் வருவதற்கு, புதிய கால்வாய்களை அமைக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.