திருச்சி:கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், திருச்சியில் தடுப்புச் சுவர் மற்றும் இரண்டு உயர் அழுத்த மின் கோபுரங்கள் சாய்ந்து விழுந்தன. அதனால், மீண்டும் கொள்ளிடம் நேப்பியர் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மேட்டூர் அணையில் இருந்து, 1.70 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. திருச்சி மாவட்டம், முக்கொம்பு மேலணைக்கு வந்து கொண்டிருக்கும் அந்த தண்ணீர், மேலணையில் இருந்து, 30,000 கன அடி காவிரியில் பாசனத்துக்கும், உபரி நீர் கொள்ளிடத்திலும் திறந்து விடப்படுகிறது. மண் அரிப்பு
கொள்ளிடத்தில், 90,000 கன அடிக்கும் அதிகமான தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திருச்சியில், திருவானைக்காவல் - நம்பர் 1 டோல்கேட் பகுதியை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே நேப்பியர் பாலம் கட்டப்பட்டது. ஏற்கனவே, இங்கிருந்த பழைய பாலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு இடிந்து விழுந்ததால், நேப்பியர் பாலத்தில் மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன், 6.50 கோடி ரூபாயில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், நேற்று முன்தினம், அந்த தடுப்புச்சுவர் அடித்துச் செல்லப்பட்டு உள்ளது. அதே பகுதியில் இருந்த இரண்டு உயர் அழுத்த மின் கோபுரங்கள், நேற்று முன்தினம் இரவிலும், நேற்று அதிகாலையிலும் சாய்ந்து விழுந்து, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. மற்ற உயர் அழுத்த மின் கோபுரங்களுக்கு சேதம் ஏற்படாமல் தடுக்க, மின் வாரிய அதிகாரிகள், பொறியாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் கூறியதாவது: ஆறு மாதத்துக்கு முன் கட்டி முடிக்கப்பட்ட தடுப்புச் சுவர், 15 மீட்டர் நீளத்துக்கு உடைந்துஉள்ளது. நீரின் வேகத்தால் தான், இரண்டு உயரழுத்த மின் கோபுரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. வரக்கூடாது
வேறு மின் பாதை வழியாக, பொது மக்களுக்கு தடையில்லாமல் மின் வினியோகம் செய்யப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையில், 52 இடங்கள் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. காவிரி படித்துறை மற்றும் கரையோரங்களுக்கு, தேவையில்லாமல் பொது மக்கள் வரக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
மணல் திருட்டு தான் காரணம்
தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனைக்கு பின், அரசு சார்பில் மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதனால், காவிரி, கொள்ளிடம் ஆறுகளில், பல இடங்களில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுகிறது. போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளில் ஒரு சிலரை சரிக்கட்டி, மணல் திருட்டு நடப்பதால், தடுக்க முடியாத நிலை உள்ளது. அனுமதி பெறாமல், பல அடி ஆழத்துக்கு மணல் அள்ளப்படுவதால், ஆறுகளில் பெரிய குழிகள் ஏற்படுகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்க காலத்தில், பாலங்கள், குடிநீர் உறிஞ்சு கிணறுகள் உள்ள இடங்களில் குழிகளை நிரப்பும் வகையில், மண் அரிப்பு ஏற்படுகிறது. இதனால், அவை வலுவிழந்து, வெள்ளத்தில் சேதமடைகின்றன. எனவே, மணல் திருட்டை தடுக்க வேண்டும் என்று, பெயர் சொல்ல விரும்பாத நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலர் சுவாமிமலை விமல்நாதன் கூறியதாவது: கல்லணை, முக்கொம்பு, அணைக்கரை பகுதிகளில், 10 கி.மீ., துாரத்திற்கு ஆற்றில் மணல் அள்ளக்கூடாது என்பது விதி. ஆனால் கல்லணை, முக்கொம்பு பகுதிகளில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஆற்றில் மணல் அரிப்பு ஏற்படுகிறது. சமதளத்தில் ஓடும் வேகத்தை விட பள்ளத்தை நோக்கி பாயும்போது, தண்ணீரின் வேகம் அதிகளவு இருக்கும். இதனால் தான், கட்டுமானங்களில் அரிப்பு ஏற்படுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட முக்கொம்பு, அணைக்கரை, கரிகால் சோழனால் உருவாக்கப்பட்ட கல்லணை ஆகியவை பல ஆண்டுகளாக உறுதியாக நிற்கின்றன. தற்போது உள்ள கட்டுமானம் தரமில்லாததால் தான் சேதமடைகின்றன. ஆற்றில் மணல் அள்ளுவதால், காவிரி சமவெளி மாவட்டங்கள் ஆபத்தை சந்திக்கும். எனவே, தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை குழுவின் மூத்த உறுப்பினர் திருப்புகழ் தலைமையில், நீர்வளத் துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆற்றில் ஏற்படும் மணல் அரிப்பை ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.