சென்னை:நில அபகரிப்பு வழக்கில் சிக்கியுள்ள, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய, சி.பி.சி.ஐ.டி., தனிப்படை போலீசார், டில்லியில் முகாமிட்டு உள்ளனர்.அ.தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.கரூர் மாவட்டம், குப்பிச்சி பாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் வாயிலாக பத்திரப்பதிவு செய்து, அவர் அபகரித்து விட்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, கரூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், பிரகாஷ் புகார் அளித்துள்ளார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.அதன் அடிப்படையில் போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதற்கிடையே, கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனு, தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.இதனால், அவர் தலைமறைவானார்.அவர் வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களை சந்திக்க, டில்லிக்கு சென்று இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு முகாமிட்டுள்ள சி.பி.சி.ஐ.டி., தனிப்படை போலீசார், அவரை தேடி வருகின்றனர்.