உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கைரேகை பதியாவிட்டாலும் காஸ் சிலிண்டர் கிடைக்கும்

கைரேகை பதியாவிட்டாலும் காஸ் சிலிண்டர் கிடைக்கும்

சென்னை:'வாடிக்கையாளரின் உண்மை தன்மையை சரிபார்க்க, கைரேகை பதிவு செய்யப்படுகிறது; இதற்கு கால அவகாசம் கிடையாது என்பதால், பதியாத வாடிக்கையாளர்கள் சிலிண்டர் கிடைக்காது என, அச்சம் கொள்ள வேண்டாம்' என, இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு சமையல் காஸ் சிலிண்டர் வினியோகம் செய்கின்றன.

கோடை வெயில்

இந்த சிலிண்டரை, எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலைக்கு வாங்கியதும், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசின் மானியத்தொகை செலுத்தப்படுகிறது.மத்திய அரசு, 'பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா' திட்டத்தின் கீழ், ஏழ்மையில் உள்ள குடும்பத்தினருக்கு இலவச காஸ் இணைப்பு வழங்குகிறது.இத்திட்ட பயனாளிகளுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில், 41 லட்சம் இலவச திட்ட பயனாளிகள் உட்பட மொத்தம், 2.33 கோடி காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்உள்ளனர். தற்போது, காஸ் சிலிண்டர் வாடிக்கையாளரின் உண்மை தன்மை சரிபார்க்கப்படுகிறது. இதற்காக, சிலிண்டர் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ அந்த வாடிக்கையாளர், தங்களின் ஏஜென்சிக்கு சென்று கருவியில் கைரேகை பதிய வேண்டும். தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால் பலரும் கைரேகை பதியாமல் உள்ளனர். இதனால், தொடர்ந்து சிலிண்டர் கிடைக்குமா என்ற அச்சம் எழுந்து உள்ளது.

வினியோகம் தொடரும்

இதுகுறித்து, இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, இலவச காஸ் பயனாளிகளுக்கு மட்டும் கைரேகை பதிவு செய்யப்பட்டது.தற்போது, அனைத்து வாடிக்கையாளருக்கும் பதிவு செய்யப்படுகிறது. ஏஜென்சிகளில், கைரேகை மற்றும் முக பதிவு வாயிலாக, வாடிக்கையாளரின் சரிபார்ப்பு உறுதி செய்யப்படுகிறது.ஏஜென்சிக்கு வர முடியாத மூத்த குடிமக்களுக்கு, டெலிவரி ஊழியர்களின் மொபைல்போன் செயலி வாயிலாக, முகம் பதிவு செய்யப்படுகிறது.வாடிக்கையாளரின் உண்மை சரிபார்ப்பு பணிக்கு அவகாசம் நிர்ணயிக்கவில்லை. கைரேகை பதியவில்லை என்றாலும் தொடர்ந்து சிலிண்டர் வினியோகம் செய்யப்படும். எனவே, வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை