சென்னை:அரசு டாக்டர்களுக்கான ஒதுக்கீட்டில், காது, மூக்கு, தொண்டை, தோல், அவசர கால சிகிச்சை உள்ளிட்ட துறைகள் நீக்கப்பட்டதற்கு, அரசு டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.முதுநிலை படிப்புகளில், மாநில அரசு ஒதுக்கீட்டில் மொத்தமுள்ள இடங்களில், 50 சதவீதம், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டின் கீழ், எம்.டி., - எம்.எஸ்., படிப்புகளை தேர்வு செய்து படித்து, மீண்டும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனர். சமூக மருத்துவம்
இதற்கிடையே, முதுநிலை மருத்துவ படிப்பில், 50 சதவீத அரசு ஒதுக்கீட்டில் சேரும் டாக்டர்களுக்கு, இனி பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை நலம், மகப்பேறு, சமூக மருத்துவம், மயக்கவியல் உள்ளிட்ட, 10 முதுநிலை படிப்புகள் தான் கிடைக்கும். அதில், ஒன்றை தேர்வு செய்து படிக்கலாம் என, மக்கள் நல்வாழ்வு துறை அரசாணை வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்புக்கு, அரசு டாக்டர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இதுகுறித்து, அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்க செயலர் ராமலிங்கம் கூறியதாவது:அரசு டாக்டர்களுக்கான ஒதுக்கீட்டில், காது, மூக்கு தொண்டை, தோல், கண், மனநலம், சர்க்கரை, அவசர மருத்துவம் உள்ளிட்ட, 20 துறைகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பற்றாக்குறை
இப்படிப்புகளுக்கு, அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற போதிய இடங்கள் இல்லை என்று கூறுவது தவறானது.தேசிய மருத்துவ ஆணைய பரிந்துரையின் படி, போதிய அளவில் டாக்டர்கள், பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். அரசின் முடிவால், அரசு மருத்துவமனைகளில், காது, மூக்கு, தொண்டை, தோல், மனநலம் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும். இப்படிப்புகளில் சேர விரும்பும் அரசு டாக்டர்கள், பொது கவுன்சிலிங்கில் பங்கேற்று தான் படிக்க முடியும். மருத்துவ மாணவர்களின் நலன் கருதி, அரசாணையை திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன், அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக்குழு தலைவர் பெருமாள் பிள்ளை ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அரசு மருத்துவக் கல்லுாரி முதுநிலை படிப்புகளில், அரசு டாக்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த, 50 சதவீத இட ஒதுக்கீடு, நடப்பாண்டில் 15 வகையான படிப்புகளுக்கு ரத்து செய்யப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. இது சமூக நீதிக்கு எதிரானது. போராடிப் பெற்ற அரசு டாக்டர் இட ஒதுக்கீட்டுக்கு ஓசையின்றி முடிவு கட்ட, தி.மு.க., அரசு சதித் திட்டம் தீட்டுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.அரசு மருத்துவமனைகளில் சில குறிப்பிட்ட துறை டாக்டர்கள் போதிய எண்ணிக்கையில் இருப்பதால், அத்துறைகளில் மட்டும் அரசு ஒதுக்கீட்டை நிறுத்தி வைக்க, தமிழக அரசு முடிவு செய்திருப்பது பிற்போக்கானது. அரசு மருத்துவமனைகளில் திறமையான மருத்துவ நிபுணர்கள் இருப்பதற்கு, 50 சதவீத இட ஒதுக்கீடே காரணம்.அரசு டாக்டர் இட ஒதுக்கீட்டையே ரத்து செய்வது, ஒருவேளை வயிறு நிரம்பி விட்டது என்பதற்காக, வயலை அழிப்பது போன்றது. எனவே, சமூக நீதிக்கு எதிரான நிலைப்பாட்டை மாற்றி, 50 சதவீத இட ஒதுக்கீட்டை தொடர வேண்டும். -- அன்புமணிபா.ம.க., தலைவர்.
வயலை அழிப்பதா?