| ADDED : ஆக 01, 2024 02:12 AM
சென்னை:நீலகிரி, கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த மையம் வெளியிட்ட அறிவிப்பு: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் வறண்ட வானிலை காணப்பட்டாலும், பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும், மிக கனமழை பெய்துஉள்ளது. இந்நிலை மேலும் சில நாட்களுக்கு தொடரும். நீலகிரி, கோவை மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புஉள்ளது. இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் பலமான தரைகாற்று மற்றும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த, 2 நாட்களுக்கு, வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா, தென் தமிழகக் கடலோர பகுதிகள், அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு, 55 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 65 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக்காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.