உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குறவர் சமூகத்தை பழங்குடியினர்பட்டியலில் சேர்க்க கோரிய வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

குறவர் சமூகத்தை பழங்குடியினர்பட்டியலில் சேர்க்க கோரிய வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை; குறவர் சமூகத்தின் 27 உட்பிரிவுகளை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை ராவணன் தாக்கல் செய்த பொதுநல மனு:மலைப் பகுதியைக் குறிக்கும் குறிஞ்சி நிலத்தின் வழித்தோன்றலாக குறவர் சமூகத்தை பற்றி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.தமிழகத்தில் இச்சமூகத்தில் 28 உட்பிரிவுகள் உள்ளன. 26 பிரிவுகள் சீர்மரபினர், ஒரு பிரிவு பட்டியல் சமூகம், ஒரு பிரிவு பழங்குடியினர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இது அனைத்து குறவர் சமூக மக்களுக்கும் கல்வி, அரசு வேலைகள் கிடைப்பதில் தடையாக உள்ளது. கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளனர். இன்னும் நாடோடி இனமாக இருப்பதால் கூடை, மூலிகைகள் விற்பனை, கால்நடை வளர்ப்பு, குறி சொல்லுதல் மூலம் வாழ்க்கையை நடத்துகின்றனர்.அவர்களின் சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்த வேண்டும். இச்சமூகத்தினரின் நிலையை கண்டறிய நியமிக்கப்பட்ட மானுடவியல் ஆய்வாளர் ஜக்கா பார்த்தசாரதி தமிழகம் முழுவதும் ஆய்வு செய்தார். அவர்,'குறவர் சமூகத்தின் அனைத்து உட்பிரிவுகளும் ஒன்றே. அவர்கள் காலப்போக்கில் குலங்களாக பிரிந்தனர். ஒரே மொழி பேசுகின்றனர். வாழ்க்கை முறை, சடங்குகள் ஒரே மாதிரியானவை. வேறுபாடுகள் இல்லை. 27 பிரிவுகளையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்,' என அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தார். இதை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். குறவர் சமூகத்தின் 27 உட்பிரிவுகளையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய கமிஷன் தலைவர், தமிழக தலைமைச் செயலர், பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடியினர் கமிஷன் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு ஏப்.8 க்கு ஒத்திவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mecca Shivan
மார் 12, 2025 18:30

இது உடனடியாக செய்யப்படவேண்டிய ஒன்று.. சமூகநீதி என்று கூவும் மத்திய மாநில அரசுகள் குறவர் இனத்தை ஏன் புறக்கணிக்கிறார்கள் ?