சென்னை: நீதிபதியின் பெயரை எப்.ஐ.ஆரில் குறிப்பிட்டு, அவரது வாய்மொழி உத்தரவால் வழக்குப்பதிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ள சப் - இன்ஸ்பெக்டருக்கு எதிராக, துறை நடவடிக்கை எடுக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை பெரவள்ளூரில் ராஜாபாதர் என்பவருக்கு சொந்தமான கடையை, முகமது அபுதாஹிர் என்பவர் வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தார். கூடுதல் வாடகை, அட்வான்ஸ் கேட்டு ராஜாபாதர் மிரட்டியதாகவும், தர மறுத்ததால், கடைக்கு மேல் பூட்டு போட்டதாகவும், அதை அகற்றி கடையை நடத்த பாதுகாப்பு வழங்கவும் கோரி, உயர் நீதிமன்றத்தில் முகமது அபுதாஹிர் வழக்கு தொடர்ந்தார்.மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், புகார் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, முதல் தகவல் அறிக்கையை நீதிபதி படித்தார். அதில், உயர் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த வாய்மொழி உத்தரவின்படி, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, தன் பெயரை குறிப்பிட்டதற்கு, நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார். 'முதல் தகவல் அறிக்கையை கூட சப் - இன்ஸ்பெக்டருக்கு பதிவு செய்யத் தெரியாதா; என் பெயரை குறிப்பிட்டுள்ளதால், சாட்சியம் அளிக்க செல்ல வேண்டுமா?' என, நீதிபதி கேள்வி எழுப்பினார்.அதைத் தொடர்ந்து, போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மன்னிப்பு கோரினார். இதை ஏற்க மறுத்த நீதிபதி ஜெயச்சந்திரன், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த திரு.வி.க. நகர் சப் - இன்ஸ்பெக்டர் நேருவுக்கு எதிராக, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டார். நடவடிக்கை எடுத்தது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, விசாரணையை வரும் 16க்கு தள்ளி வைத்தார்.