உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உண்மையை மறைத்து வாரிசு சான்றிதழ் கேட்டால் இனி குற்ற வழக்கு பாயும்

உண்மையை மறைத்து வாரிசு சான்றிதழ் கேட்டால் இனி குற்ற வழக்கு பாயும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:தகவலை மறைத்து அல்லது பொய்யான தகவல் அளித்து, வாரிசு சான்றிதழ் கோருபவர்களுக்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து வருவாய் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்கும்படி, வருவாய் நிர்வாக ஆணையருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மாரண்ணன்; தன் தந்தை மாரண்ண கவுடரின் ஒரே வாரிசு என, சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். வருவாய் அதிகாரிகள் விசாரணையில், மாரண்ண கவுடருக்கு நான்கு வாரிசுகள் இருப்பது தெரிய வந்தது. உண்மையான தகவலை மறைத்ததால், விண்ணப்பத்தை நிராகரித்து தாசில்தார் உத்தரவிட்டார். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மாரண்ணன் வழக்கு தொடர்ந்தார். மனுவை, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். அரசு தரப்பில், கூடுதல் பிளீடர் பரணிதரன், அரசு வழக்கறிஞர் வினோத்குமார் ஆஜராகினர். நீதிபதி பிறப்பித்த உத்தரவு:உண்மையான விபரங்களை மறைத்து விண்ணப்பிப்பதால், அதை நம்பி, வருவாய் அதிகாரிகள் வாரிசு சான்றிதழை வழங்குகின்றனர். இறந்தவரின் சொத்துக்களுக்கு, வாரிசுதாரர் உரிமையாளர் ஆகிறார். உண்மை தகவல்களை மறைத்து, வாரிசு சான்று பெற்று, இறந்தவரின் சொத்துக்களை மாற்றுவதால், மற்ற வாரிசுதாரர்களின் உரிமை பாதிக்கப்படுகிறது.சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் பெற, உண்மையான தகவலை மறைத்து பொய் தகவலை வழங்குவது, இந்திய தண்டனை சட்டப்படி குற்றம். எனவே, வருவாய் அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, போலீசில் புகார் அளிக்க வேண்டும். வாரிசு சான்றிதழ் வழங்கும் போது, வருவாய் அதிகாரிகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முறையான விசாரணை நடத்த வேண்டும்.வாரிசு சான்றிதழ் கேட்டு, பொய் தகவலை அளிப்பவர்களுக்கு எதிராக, சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி, வருவாய் அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுறுத்தலை, நில நிர்வாக ஆணையர் வழங்க வேண்டும். பொய் தகவலுடன் விண்ணப்பிப்பவருக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கும்படி, ஐந்து வாரங்களுக்குள் அனைத்து வருவாய் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்.தவறு செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, வருவாய் அதிகாரிகள் தவறினால், அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையை வருவாய் நிர்வாக ஆணையர் எடுக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தேவ ஆசிர்வாதம்
மே 23, 2025 14:49

3 பேரில் ஒருவர் மட்டும் வாரிசு சான்று வாங்கி இருக்கிறார். இருவர் இல்லாமல் இது எப்படி?


GMM
மே 15, 2024 08:40

பிறப்பு சான்றிதழ் வழங்குவது உள்ளாட்சி அமைப்புகள் வாரிசு சான்றிதழ் வழங்குவது வருவாய் துறை வாரிசு சான்றிதழ் பதிய வேண்டியது தந்தை உடன் பிறந்தவர் மற்றும் மூத்த மகன் பொறுப்பு என்று இருக்க வேண்டும் வாரிசின் பிறப்பு இறப்பு விவரம் கட்டாயம் பதிவாகி கொண்டு இருக்க வேண்டும் நிர்வாக குறை நிர்வாகம் போலீசார் உதவி நாட கூடாது


மேலும் செய்திகள்









புதிய வீடியோ