| ADDED : மே 06, 2024 11:53 PM
சென்னை: மல்லிகைப் பூக்கள் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளதால், விவசாயிகள் விரக்தி அடைந்து உள்ளனர்.திண்டுக்கல், மதுரை, தேனி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில், மல்லிகைப் பூ சாகுபடி நடந்து வருகிறது. ஜனவரி முதல் மார்ச் வரை பனிப்பொழிவு இருந்ததால், மல்லிகைப் பூக்கள் உற்பத்தி கடுமையாக குறைந்தது. இதனால், அதன் விலை தாறுமாறாக உயர்ந்தது. சென்னை கோயம்பேடு சந்தையில், கிலோ மல்லிகைப் பூ 3,000 ரூபாய் வரை விற்றது. கோடை வெயில் துவங்கியுள்ள நிலையில், மல்லிகைப் பூக்கள் உற்பத்தி தற்போது அதிகரித்துள்ளது. கத்திரி வெயில் காரணமாக சுப நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. இதனால், மல்லிகைப் பூக்களுக்கு மவுசு குறைந்து அதன் விலை சரிந்துள்ளது. கோயம்பேடில் கிலோ மல்லிகைப் பூ, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது; அதை வாங்குவதற்கு ஆளில்லை.இதனால், சரமாக தொடுத்து மூன்று முதல் ஐந்து முழம், 50 முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை சரிவால், மல்லிகைப் பூ சாகுபடி செய்த விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.