| ADDED : ஜூன் 23, 2024 04:26 PM
தஞ்சாவூர்:தஞ்சாவூரில் நேற்று தமிழ்நாடு மொத்த மருந்து வணிகர் சங்க வெள்ளி விழா மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்ட த.மா.கா., தலைவர் வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் நடந்து மூன்று நாட்களாகியும், 55 பேர் உயிரிழந்தும் முதல்வர் ஸ்டாலின் இன்னும் அங்கு சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி பதட்டத்தை குறைக்கவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. கள்ளச்சாராயத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. இச்சம்பவம் தொடர்பாக, முழு பூசணியை சோற்றில் மறைக்க வேண்டும் என்பதற்காக சி.பி.ஐ., விசாரணை வேண்டாம் என்கின்றனர். முதலில் கள்ளச்சாராயம் இல்லை என அரசு தரப்பில் கூறப்பட்டது. அதன் பிறகு கள்ளச்சாராயம் என்பது உறுதியானது.இதை மனசாட்சியோடு நினைத்து பார்க்க வேண்டும். தமிழக அரசின் எந்த விதமான விசாரணையையும் மக்கள் ஏற்கத் தயாராக இல்லை. இதற்கு சி.பி.ஐ., விசாரணை தான் தீர்வு தரும் என மக்கள் உறுதியாக நம்புகின்றனர். மேலும் டாஸ்மாக் மதுக்கடைகளைப் படிப்படியாக மூட வேண்டும்.நீட் தேர்வில் சில தவறுகள் நிகழ்ந்துள்ளது. மத்திய அமைச்சர் கல்வித் துறையின் தரத்தை உயர்த்துவதற்காக ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழகத்தில் தி.மு.க.,வினர், இந்தியா கூட்டணியினர் கல்வித் துறையில் அரசியலைப் புகுத்தி மாணவர்களையும், பெற்றோர்களையும் குழப்புவது ஏற்புடையதல்ல. இதற்காக லோக்சபா கூட்டத்தை முடக்க நினைப்பது, வருங்கால மாணவர்களுக்கு நல்லதல்ல.ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பது, நம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசுடன், மத்திய அரசு பேச்சு நடத்தி இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.