| ADDED : ஏப் 23, 2024 01:28 AM
ராமேஸ்வரம்: இலங்கையில் கடன் தொல்லையால் அவதியுற்ற நிலையில் கள்ளப்படகில் தனுஷ்கோடிக்கு மகனுடன் வந்ததாக தெரிவித்த இலங்கை அகதி கஜேந்திரன் 48, விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.இலங்கை மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவனேஸ்வரன் 49, மற்றும் கஜேந்திரன். கஜேந்திரன் மகன் சஜித்மேனன் 8. இவர்கள் அகதியாக இலங்கை மன்னாரில் இருந்து கள்ளப்படகில் தனுஷ்கோடி வந்தனர். இவர்களிடம் ரூ.ஒரு லட்சம் கூலி வாங்கிய இலங்கை படகோட்டிகள் தனுஷ்கோடியில் இருந்து 6 கி.மீ., துாரத்திலுள்ள 5ம் மணல் தீடையில் இறக்கி விட்டுச் சென்றனர்.தனுஷ்கோடி மரைன் போலீசார் படகில் சென்று அகதிகளை மீட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். சிவனேஸ்வரன், ''மட்டக்களப்பில் வீடு கட்ட ரூ.40 லட்சம் கடன் வாங்கியதை திருப்பி செலுத்த முடியவில்லை. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் வேலை இன்றி தவித்த நிலையில் கடன்காரர்களிடம் தப்பிக்க இந்தியா வந்தேன்,'' என்றார்.கஜேந்திரன் கூறுகையில், ''விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்ததால் 2009ல் முள்வேலி சிறையில் 2 ஆண்டுகள் அடைக்கப்பட்டேன். பின் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நீதிமன்றம் உத்தரவின்படி மாதம் ரூ.10 ஆயிரம் ஜீவனாம்சம் கொடுக்கிறேன். வேலை இன்றி வீட்டில் முடங்கி கிடந்ததால் ஜீவனாம்சம் கொடுக்க முடியவில்லை. இதனால் மகனுடன் தனுஷ்கோடி வந்தேன், '' என்றார்.