கோவை:கோவை மாநகராட்சி, 19வது வார்டு கவுன்சிலர் கல்பனா, மேயர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, வரும், 8ம் தேதி (திங்கட்கிழமை) காலை, 10:30 மணிக்கு அவசர கூட்டம் நடத்தப்படுகிறது.கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இருந்தவர், 19வது வார்டு கவுன்சிலர் கல்பனா; தி.மு.க.,வை சேர்ந்த இவர், போதிய கல்வி அறிவு இல்லாதது, அனுபவம் இன்மை, அரசியல் சூட்சுமம் தெரியாத காரணத்தால், பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானார்.கட்சி தலைமையின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, தனது உடல் நிலையை காரணம் காட்டி, மேயர் பதவியை ராஜினாமா செய்து, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கடிதம் கொடுத்தார். இவரது ராஜினாமா ஏற்கப்பட்டு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேர்தல் விதிமுறைப்படி, மேயர் ராஜினாமாவை, மன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்பதால், வரும், 8ம் தேதி (திங்கட்கிழமை) காலை, 10:30 மணிக்கு அவசர கூட்டம் நடத்தப்படுகிறது.இதுதொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:டவுன்ஹால் விக்டோரியா ஹாலில் அவசர கூட்டம் நடைபெற இருக்கிறது. அன்றைய கூட்டத்தில், மன்றத்தின் பார்வைக்கு ராஜினாமா கடிதம் வைக்கப்படும். பின், மாநகராட்சியில் இருந்து, கலெக்டர் கிராந்திகுமாருக்கு, கோவை மாநகராட்சி மேயர் பதவி காலியாக இருப்பதாக தெரிவிக்கப்படும்.மாவட்ட நிர்வாகத்தில் இருந்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பப்படும். மேயர் பதவி காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு, புதிய மேயர் தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். அன்றைய தினம் புதிய மேயர் தேர்வு செய்யப்படுவார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
விக்கிரவாண்டி விரைவு
காலியாக உள்ள மேயர் பதவியை கைப்பற்ற, தி.மு.க., பெண் கவுன்சிலர்கள் பலரும் முயற்சித்து வருகின்றனர். சிலர், சென்னை சென்று, கட்சியின் தலைமை கழக நிர்வாகிகளை சந்தித்து, அழுத்தம் கொடுத்துள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணியில் அமைச்சர்கள் ஈடுபட்டு இருப்பதால், கவுன்சிலர்கள் பலரும் அங்கு விரைந்திருக்கின்றனர்.