கூடலூர்: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பம், மசினகுடி சீகூர் யானை வழித்தடங்களில் உள்ள, தனியார் விடுதி கட்டடங்களை காலி செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், 'முதுமலை மசினகுடியை ஒட்டிய, சீகூர் யானை வழித்தடத்தில் உள்ள கட்டடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,' என, 2009ல் வக்கீல் யானை ராஜேந்திரன் பொது நல வழக்கு தொடர்ந்தார். இதை தொடர்ந்து, 2011ல், யானை வழித்தடங்களில் உள்ள, அனுமதியில்லாத சுற்றுலா விடுதிகள்; ஆக்கிரமிப்புகளை அகற்ற, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து விடுதி உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட், சென்னை ஐகோர்ட் உத்தரவை உறுதி செய்தது.தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி, 2018, ஆக., 12ல் யானை வழித்தடங்களில் உள்ள, 39 தனியார் விடுதிகளுக்கு, மாவட்ட நிர்வாகம் 'சீல்' வைத்தது. வழித்தடத்தை மீட்கும் நடவடிக்கையாக, சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் மூன்று பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. அதற்காக, ஊட்டியில் தனி அலுவலகம் திறக்கப்பட்டது. அங்கு விடுதி உரிமையாளர்கள்; உள்ளூர் மக்கள் தங்களுக்கு சொந்தமான இடம்; கட்டடம் தொடர்பான ஆவணங்களுடன், தங்கள் கோரிக்கை விண்ணப்பங்கள் அளித்தனர்.இக்கமிட்டி, விண்ணப்பதாரர்களின் ஆவணங்களின் அடிப்படையில் யானை வழித்தடங்களில் 'சீல்' வைத்த கட்டடங்களை, பலமுறை ஆய்வு செய்தது. தொடர்ந்து, யானை வழித்தடங்களில் அனுமதி இன்றி ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை, அகற்றும்படி அதன் உரிமையாளர்களுக்கு கடந்த ஆண்டு 'நோட்டீஸ்' அளித்தது. ஆனால், இதுவரை கட்டடங்கள் இடித்து அகற்றப்படவில்லைஇந்நிலையில், சீகூர் யானை வழித்தடத்தில் உள்ள, தனியார் விடுதி கட்டடங்களை இடித்து அகற்றி காலி செய்யும்படி, சோலுார் பேரூராட்சி, மசினகுடி உட்பட நான்கு உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், கட்டட உரிமையாளர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறுகையில், 'சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, யானை வழித்தடங்கள் உள்ள தனியார் விடுதி கட்டடங்களை இடித்து அகற்ற, அதன் உரிமையாளர்களுக்கு இரண்டாம் கட்டமாக 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸ் கிடைத்த நாளிலிருந்து, 15 நாட்களுக்குள், உரிமையாளர்கள் கட்டங்களை இடித்து அகற்ற வேண்டும். இல்லையெனில், கட்டடங்களை இடித்து அகற்ற அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.