சென்னை:கடலில் அமைக்கப்படும் காற்றாலை மின் நிலையத்தில், கடலில் இருந்து கடற்கரை வரை மின்சாரம் எடுத்து வருவதற்கான வழித்தட கட்டணத்தை ஏற்குமாறு, மத்திய அரசை தமிழக மின்வாரியம் வலியுறுத்திஉள்ளது.கன்னியாகுமரி முதல் ராமநாதபுரம் இடையிலான கடல் பகுதியில், காற்றாலை மின் நிலையம் அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வினியோகிக்க, கடலில் கேபிள், நிலத்தில் மின்கோபுர வழித்தடம் அமைக்கப்பட உள்ளன. துணைமின் நிலையம்
முதற்கட்டமாக, 1,000 மெகாவாட் வினியோகிக்க, திருநெல்வேலி மாவட்டம் ஆவரைகுளத்தில், 400/230 கிலோ வோல்ட் திறனில் துணைமின் நிலையம் அமைக்கப்படுகிறது. கடலில் நிறுவப்படும் காற்றாலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை ஒருங்கிணைத்து எடுத்துவர, கடலுக்கு அடியில், 230 கி.வோ., திறனில் கேபிள் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.அது ஆவரைகுளம் துணை மின் நிலையத்துடன் இணைக்கப்படும். அங்கிருந்து, மின்கோபுர வழித்தடத்தில் மின்சாரம் எடுத்து செல்லப்படும். இந்த வழித்தடத்தை, 11,485 கோடி ரூபாய் செலவில், மத்திய மின் தொடரமைப்பு நிறுவனம் அமைக்க உள்ளது. இந்த வழித்தடத்தை பயன்படுத்த யூனிட்டிற்கு, 4.20 ரூபாய் கட்டணத்தை மத்திய மின் தொடரமைப்பு நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இதை மத்திய அரசே ஏற்க, மின்வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:நிலத்தில் உள்ள காற்றாலை மின்சாரம் யூனிட் சராசரியாக, 3.10 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. மத்திய வழித்தடத்தை பயன்படுத்த யூனிட்டிற்கு, 1.50 ரூபாய் கட்டணம் செலுத்தப்படுகிறது. அரசு நிதி உதவி
கடல் காற்றாலை மின்சாரம் யூனிட், 4 ரூபாய்க்கு கிடைக்கும் என்ற தகவலால், 2,000 மெகா வாட்டை தமிழகம் வாங்க முன்வந்துள்ளது. அதேசமயம், வழித்தட கட்டணம் மட்டும் யூனிட், 4.20 ரூபாயாக உள்ளது. இதனால் யூனிட் மின்சார செலவு, 9 ரூபாயாக இருக்கும். கடலில் காற்றாலை மின் நிலையம் அமைக்கும் நிறுவனங்களை ஊக்குவிக்க, மத்திய அரசு நிதி உதவி செய்ய உள்ளது. அதேபோல், இந்த வழித்தட செலவையும், மத்திய அரசு ஏற்குமாறு, மத்திய மின்துறைக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.