மே 26, 1978மயிலாடுதுறையில், பொன்னப்பா - எலிசபெத் தம்பதியின் மகனாக, 1925, ஜூன் 19ல் பிறந்தவர் பாலையன் எனும் ஜெகசிற்பியன்.இவர், சென்னை ஓவிய கல்லுாரியில் ஓவியம் கற்றார். தஞ்சை ஜெர்வாஸ், மாயவரத்தான், ஜெகசிற்பியன் எனும் புனை பெயர்களில் சிறுகதை, வரலாறு, சமூக புதினங்களை எழுதினார். இவரின், 'ஏழையின் பரிசு, கொம்புத்தேன், திருச்சிற்றம்பலம்' உள்ளிட்ட புதினங்களும், 'நரிக்குறத்தி' உள்ளிட்ட சிறுகதைகளும் பல்வேறு போட்டிகளில் பரிசுகளை பெற்றன.இவரின் சிறுகதைகள் 12 தொகுதிகளாகவும், குறுநாவல்கள் இரண்டு தொகுதிகளாகவும் வெளியாகின. பல கதைகள் ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. கொஞ்சும் சலங்கை திரைப்படத்திற்கு வசனம் எழுதினார். இவரின், 'அவன் வருவான், நொண்டிப்பிள்ளையார், ஆலவாயழகன், நடை ஓவியம்' உள்ளிட்ட கதைகள் சென்னை, மதுரை பல்கலைகளில் பாடமாக்கப்பட்டன.பிரிட்டனின் கேம்ப்ரிட்ஜ் பல்கலையின் சர்வதேச சுயசரிதை மையம், இவரின் வரலாற்றை பதிப்பித்து உள்ளது. இவர் தன் 53வது வயதில், 1978ல் இதே நாளில் மறைந்தார்.தமிழின், 'வரலாற்று மிகு கற்பனை எழுத்தாளர்' மறைந்த தினம் இன்று!