| ADDED : ஆக 17, 2024 12:32 AM
சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில், ஹிந்து முன்னணி அமைப்பின் சென்னை நகர செயலர் சிவா விஜயன் என்பவர் தாக்கல் செய்த மனு:வங்கதேசத்தில் ஆட்சி கலைப்பை தொடர்ந்து, அங்குள்ள ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன; இதில், பலர் உயிரிழந்துள்ளனர். பெண்களை, பாலியல் வன்முறை செய்துள்ளனர். கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு குரல் எழும்பவில்லை. மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி, ஹிந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவானது. சென்னை உட்பட தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. மனுக்களை நிராகரித்து விட்டனர். அதை ரத்து செய்து, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கும்படி, போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன் ஆஜரானார். புதிதாக மனு அளிக்கும்படி அறிவுறுத்திய நீதிபதி, அதை பரிசீலிக்கும்படி போலீஸ் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை, வரும் 21ம் தேதிக்கு தள்ளி வைத்தார். எந்தெந்த இடங்களில் அனுமதி; எந்தெந்த இடங்களில் அனுமதி மறுப்பு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும், நீதிபதி உத்தரவிட்டார்.