சென்னை : வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை பாடமாக எடுத்துக் கொண்டு, தமிழக மலை கிராமங்கள், நகரங்களை உடனே ஆய்வு செய்யுமாறு தமிழக அரசுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. கோவை மாவட்டம், வால்பாறையில் மண் சரிவு ஏற்பட்டு ஒரு மூதாட்டியும், அவர் பேத்தியும் இறந்த நிலையில், மேலும் பாதிப்பு ஏற்படக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளதால், ஆற்றோரம் வசிப்பவர்களை உடனே இடம் மாற்ற, கோவை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். -கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில், 300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படை, கேரள காவல் துறை, தீயணைப்பு வீரர்கள், ராணுவம், கடற்படை, விமானப்படை வீரர்கள், ஐந்தாவது நாளாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கிட்டத்தட்ட 60 அடி ஆழத்திற்கு செம்மண் நிரம்பி இருக்கும் மலைப் பகுதியில், சுற்றுச்சூழல் விதிகளை மீறி மரங்களை வெட்டியதும், அதிகமான கட்டடங்கள் கட்டப்பட்டதும் தான் நிலச்சரிவுக்கு முக்கிய காரணங்கள் என்று விஞ்ஞானிகளும், நிபுணர்களும் கூறுகின்றனர். சுற்றுலா மேம்பாட்டுக்காக அரசு மேற்கொள்ளும் சாலை, மேம்பாலப் பணிகளும் இந்த ஆபத்தை அதிகரிக்கின்றன. நாட்டை உலுக்கிய வயநாடு நிலச்சரிவு குறித்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல பிரிவு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், இதுவரை வெளியான செய்திகளை ஆய்வு செய்து, அரசுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தனர்:நிலச்சரிவு பேரழிவு குறித்தும், மீட்புப் பணிகள், சேதங்கள் குறித்தும் கேரள அரசு, வயநாடு, கோட்டயம், இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் நடந்த கட்டுமான திட்டங்கள், குவாரிகள், சுரங்கங்கள், சாலைகள் குறித்த விவரங்கள் அதில் இடம்பெற வேண்டும். இனிமேல் நிலச்சரிவு ஏற்படாமல் தடுக்க என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க போகிறீர்கள் என்பதை அறிக்கையில் விளக்க வேண்டும்.வயநாடு சம்பவத்தை தமிழக அரசு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழக மலையூர்களில் குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்ட மலை கிராமங்கள், நகரங்களில், அரசும் உள்ளாட்சி நிர்வாகமும் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பதை தீர்ப்பாயம் தெரிந்துகொள்ள விரும்புகிறது. இதுகுறித்து, தமிழக அரசின் தலைமை செயலர், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை செயலர், தமிழக பேரிடர் மேலாண்மை துறை, நீலகிரி, கோவை கலெக்டர்கள் ஆகியோர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வழக்கின் விசாரணை, செப்டம்பர் 9ல் துவங்கும்.இவ்வாறு தீர்ப்பாயத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.தீர்ப்பாயத்தில் ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், 'மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட கஸ்துாரிரங்கன் கமிட்டி அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை, இதுவரை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. மேற்குத் தொடர்ச்சி மலையின் 37 சதவீத பகுதிகளை, அதாவது 60 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதிகளை, சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது' என்றார்.விடுதிகளை மூடினால் ஆபத்தை தவிர்க்கலாம்
வயநாடு சம்பவத்தை அடுத்து, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், மலை கிராமங்களை கண்காணிக்கும்படி, மாவட்ட நிர்வாகங்களுக்கு, தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. குறிப்பாக திண்டுக்கல், நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி பகுதிகளில் மலை கிராமங்களை கண்காணிக்க, கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மலை நகரங்களில் வாழும் மக்களுக்கு, அங்கு சுற்றுலா வரும் மக்களால் வருமானம் கிடைப்பது நிஜம். ஆனால், சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் கட்டுமானங்களும், வாகனங்களும் பெருகும்போது, இயற்கையின் சமநிலைக்கு களங்கம் ஏற்படுகிறது. அதிலிருந்து விடுபட இயற்கை சிலிர்க்கும்போது அதன் விளைவுகளுக்கு பேரழிவு என பெயரிடுகிறான் மனிதன்.உலகப்புகழ் பெற்ற பல வெளிநாட்டு சுற்றுலா நகரங்கள் இந்த எதார்த்தம் புரிந்து, சுற்றுலா பயணியரே வராதீர்கள் என்று விளம்பரம் செய்கின்றன. நம் நாட்டில் இன்னும் அந்தளவு விழிப்புணர்வு உண்டாகவில்லை. பெருமழை, நிலச்சரிவு நேரும்போது மட்டும் பயணியர் செல்ல வேண்டாம் என அரசு அறிவுரை சொல்கிறது. விடுதிகளை மூடுவதற்கு ஒரு உத்தரவு போட்டாலே போதும். ஆனால், அரசுக்கு மனம் வருவது இல்லை. உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற ஒற்றை வாக்கியத்தில், விஷயத்தை முடித்து விடுகின்றனர். 'வாழ்க்கையே மண்ணில் புதையும் அபாயம் நேரும்போது வாழ்வாதாரம் பற்றி பேசுவது, அரசியல், பொருளாதார லாபம் கருதி நடத்தப்படும் திசை திருப்பலே தவிர வேறில்லை' என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.