உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விபரமில்லாத வீட்டு வசதி வாரிய இணையதளம் அப்டேட் செய்ய உத்தரவு

விபரமில்லாத வீட்டு வசதி வாரிய இணையதளம் அப்டேட் செய்ய உத்தரவு

சென்னை:வீட்டுவசதி வாரிய இணையதளத்தில், பொதுமக்களுக்கு தேவையான முழுமையான விபரங்கள் இல்லை என்ற புகார் எழுந்த நிலையில், அதை சீரமைக்க உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் வீட்டுவசதி வாரியம் சார்பில் பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில், தற்போதைய நிலவரப்படி, 11,000க்கும் மேற்பட்ட வீடுகள், மனைகள் விற்காமல் முடங்கியுள்ளன. இது சம்பந்தமாக, அந்தந்த கோட்ட அலுவலகங்களை மக்கள் அணுகினால் உரிய தகவல்கள் கிடைப்பதில்லை. இதனால், விற்பனைக்கு தயாராக உள்ள குடியிருப்புகள் குறித்த விபரங்களை இணையதளத்தில் வெளியிட வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி, வாரிய தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில், வாரிய இணையதளம் கடந்தாண்டு புதுப்பிக்கப்பட்டது. இதன்படி, www.tnhb.tn.gov.inஎன்ற இணையதளத்துக்கு பதிலாக, tnhb.inஎன்ற முகவரியில் புதிய இணையதளம் துவக்கப்பட்டது. பொதுமக்கள், வீடு, மனைகள் குறித்த தகவல்களை முழுமையாக பெறுவதுடன், ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்யும் வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டது. ஆனால், கடந்த சில வாரங்களாக இந்த இணையதளத்தில் உரிய தகவல்கள், 'அப்டேட்' செய்யப்படுவதில்லை என்ற புகார் எழுந்து உள்ளது. முதல்வர், துறை அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்த விபரங்கள் மட்டுமே அப்டேட் செய்யப்படுகின்றன. விற்பனைக்கு காத்திருக்கும் வீடுகள், மனைகள் குறித்த விபரங்கள், புதிய திட்டங்கள் குறித்த தகவல்கள் முழுமையாகக் கிடைக்காமல் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சீரமைப்புக்குப் பின்னும் வாரியத்தின் இணையதளத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வீட்டுவசதி வாரிய உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: விற்காத வீடுகள், மனைகள் குறித்து பொதுமக்கள் எளிதாக அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் தான், இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டது. இதில், விற்பனைக்காக உள்ள வீடுகள், மனைகள் விபரங்களை பொதுமக்கள் பெறும் வகையில் உரிய தகவல்கள் ஓரிரு நாட்களில் அப்டேட் செய்யப்படும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை