| ADDED : ஜூலை 04, 2024 02:05 AM
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இருந்து 90 விசைப்படகுகளில் ஜூலை 2ல் மீனவர்கள் மன்னார் வளைகுடா ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் மீன்பிடித்து விட்டு நேற்று காலை பாம்பன் கரை திரும்பினார்கள். இதில் பெரும்பாலான படகில் வெளமீன், சீலா, பாரை மீன், மாஊழா உள்ளிட்ட பலவகை மீன்கள் சிக்கின. மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், கிலோவுக்கு 20 முதல் 40 ரூபாய் வரை விலை குறைந்ததால், மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். நேற்று ஒரு கிலோ வெளமீன் 250 ரூபாய் - பழைய விலை 280, பாரை மீன் 280 ரூபாய் - பழைய விலை 300 ரூபாய், மாஊழா 180 ரூபாய் - பழைய விலை 200 ரூபாய், புள்ளி திருக்கை 110 ரூபாய் - பழைய விலை 130 ரூபாய்க்கு விற்றது. சீலா மீன் மட்டும் விலை குறையாமல் கிலோ 800 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கினர். கேரளா, கோவை, சேலம் உள்ளிட்ட பல நகரங்களில் மீன் விற்பனை சூடு பிடிக்காததால் விலை குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.