சென்னை: ஓராண்டாக, துணைவேந்தர் இல்லாமல் சென்னை பல்கலை இயங்குகிறது என்றும், அதிகார அமைப்புகளுக்கு இடையேயான பிரச்னையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்றும், சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஜெகநாத் என்பவர் தாக்கல் செய்த மனு:உயர் கல்வித்துறை, கடந்த செப்டம்பரில் பிறப்பித்த உத்தரவில், சென்னை பல்கலை துணைவேந்தர் தேர்வுக்கான தேடுதல் குழு உறுப்பினர்களை அறிவித்தது. வேந்தரின் பிரதிநிதியாக பேராசிரியர் பட்டு சத்யநாராயணா, சிண்டிகேட் பிரதிநிதியாக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தீனபந்து, செனட் பிரதிநிதியாக டாக்டர் பி.ஜெகதீசன் ஆகியோர் தேடுதல் குழுவில் உள்ளனர். இதில், யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக்குழுவின் பிரதிநிதி இடம் பெறவில்லை.யு.ஜி.சி.,யின் பிரதிநிதி இல்லாமல், தன்னிச்சையாக தேடுதல் குழுவை, மாநில அரசு நியமித்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவும் இது உள்ளது. எனவே, உயர் கல்வித்துறை உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், கடந்த டிசம்பரில் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில், 'தேடுதல் குழுவை தமிழக அரசு நியமிக்கும் முன், கவர்னர் ஒரு குழுவை நியமித்தார்.அந்தக் குழுவில், யு.ஜி.சி., பிரதிநிதி உள்ளார். கவர்னர் நியமித்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.அதைத்தொடர்ந்து, வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. பல்கலை தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜரானார்.அவர், தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தன்னை இணைக்கக் கோரி மனுதாரர் மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த வழக்கில், சென்னை பல்கலையை இணைக்கும்படியும் மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும், தெரிவித்தார்.இதையடுத்து, முதல் பெஞ்ச் 'துணைவேந்தர் இல்லாமல், ஓராண்டாக, சென்னை பல்கலை இயங்குகிறது. இது, மோசமான நிலை. துணைவேந்தர் நியமனம் தொடர்பாக, அதிகார அமைப்புகளுக்கு இடையேயான பிரச்னையால், மாணவர்களின் கல்வி தான் பாதிக்கப்படுகிறது.மாணவர்களின் கல்வி குறித்து, நீதிமன்றம் கவலை கொள்கிறது. அதிகார அமைப்புகளுக்கு இடையேயான பிரச்னை குறித்து அல்ல' என தெரிவித்தது. விசாரணையை, ஜூன் 5க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.