திருநெல்வேலி,:பாளை அரசு சித்த மருத்துவக் கல்லுாரி ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளின் உடல்நிலையை மேம்படுத்தும் வகையில் திருத்தியமைக்கப்பட்ட புதிய உணவுத் திட்டம் நடைமுறைக்கு வந்தது.பாளை. அரசு சித்த மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆஸ்பத்திரி உள்நோயாளிகள் பிரிவில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சிறப்புக் கவனத்துடன் சித்த மருத்துவ அடிப்படையான முக்குற்றம் மற்றும் உடல் தாது சமநிலையை ஏற்படுத்தி நோயாளிகளின் உடல்நிலையை மேம்படுத்தும் வகையில் திருத்தி அமைக்கப்பட்ட உணவுத் திட்டம் நேற்று நடைமுறைக்கு வந்தது.கல்லுாரி முதல்வர் மலர்விழி தலைமை வகித்து திருத்தி அமைக்கப்பட்ட புதிய உணவை நோயாளிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார். ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். கல்லுாரி பேராசிரியர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், செவிலியர் கண்காணிப்பாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.புதிய உணவு
நேற்று காலை அவல், பனங்கருப்பட்டி, பேரிச்சம்பழம் வழங்கப்பட்டது. மதியம் முருங்கைப்பொடி, நல்லெண்ணெய், சாதம், சாம்பார், முட்டைக்கோஸ், கீரை பொரியல்கள், மோர் வழங்கப்பட்டது. மாலையில் மூலிகை தேநீர், பாசிப்பயிறு, இரவில் இட்லி, சாம்பார் வழங்கப்பட்டது.புதிய உணவுத்திட்டத்தால் உள்நோயாளிகளின் உடல் நலம் மேம்படும், அவர்களுக்கு தேவையான சத்துக்கள் உணவு மூலம் கிடைக்கும் என கல்லுாரி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. புதிய உணவு முறைக்கு நோயாளிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.கிழமை வாரியாக புதிய உணவு
கிழமைவாரியாக திருத்தி அமைக்கப்பட்ட உணவுத் திட்டம் விபரம் வருமாறு:வாரந்தோறும் திங்கட்கிழமை காலையில் அவல், பனங்கருப்பட்டி, பேரிச்சம் பழம், மதியம் துாதுவளைப்பொடி, நல்லெண்ணெய், சாதம், சாம்பார், கேரட், கீரை பொரியல்கள், மோர், மாலையில் மூலிகை தேநீர், கொண்டைக்கடலை, இரவில் இட்லி, சாம்பார் வழங்கப்படுகிறது.செவ்வாய் கிழமை காலையில் பொங்கல், சாம்பார், வாழைப்பழம், மதியம் கருவேப்பிலைப்பொடி, நல்லெண்ணெய், சாதம், சாம்பார், பீன்ஸ், கீரை பொரியல்கள், மோர், மாலையில் மூலிகை தேநீர், காராமணி சுண்டல், இரவில் இட்லி, சாம்பார் வழங்கப்பட உள்ளது.புதன் கிழமை காலையில் காய்கறி ரவை கிச்சடி, சாத்துக்குடி அல்லது ஆரஞ்சு, மதியம் சுண்டைவத்தல் பொடி, நல்லெண்ணெய், சாதம், சாம்பார், கோவைக்காய், கீரை பொரியல்கள், மோர், மாலையில் மூலிகை தேநீர், கொண்டைக்கடலை, இரவு இட்லி சாம்பார் வழங்கப்பட உள்ளது.வெள்ளிக்கிழமை காலை கருப்பு உளுந்து கஞ்சி, எள்ளுத் துவையல், சாத்துக்குடி, மதியம் பிரண்டை பொடி, நல்லெண்ணெய், சாதம், சாம்பார், வெண்டைக்காய், கீரை பொரியல்கள், மோர், மாலையில் மூலிகை தேநீர், கொண்டைக் கடலை, இரவு இட்லி சாம்பார் வழங்கப்படுகிறது.சனிக்கிழமை காலை தினைப் பொங்கல், சாம்பார், வாழைப்பழம், மதியம் அஷ்ட சூரணம், நல்லெண்ணெய், சாதம், சாம்பார், புடலங்காய், கீரை பொரியல்கள், மோர், மாலையில் மூலிகை தேநீர், காராமணி சுண்டல், இரவு இட்லி, சாம்பார், ஞாயிற்றுக்கிழமை காலை காய்கறி ரவை கிச்சடி, வாழைப்பழம், மதியம் நெல்லிக்காய் பொடி, நல்லெண்ணெய், சாதம், சாம்பார், அவரைக்காய், கீரை பொரியல்கள், மோர் மாலையில் மூலிகை தேநீர், பாசிப்பயிறு, இரவு இட்லி சாம்பார் வழங்கப்படுகிறது.