உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவர்களின் பேரார்வம், பெற்றோரின் பெருமுயற்சி: சென்னையில் களைகட்டியது பட்டம் செஸ் டோர்னமென்ட்

மாணவர்களின் பேரார்வம், பெற்றோரின் பெருமுயற்சி: சென்னையில் களைகட்டியது பட்டம் செஸ் டோர்னமென்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' மற்றும் சென்னை வி.ஐ.டி., பல்கலை சார்பில், மாநில அளவிலான, 'பட்டம் செஸ் டோர்னமென்ட் - 2024' நேற்று நடந்தது. வண்டலுார் - கேளம்பாக்கம் சாலையில் உள்ள சென்னை வி.ஐ.டி., பல்கலை வளாகத்தில் நடந்த போட்டிக்கு, பெண்கள் 194 பேரும், ஆண்கள் 474 பேரும் என, மொத்தம் 668 பேர் வந்தனர். 9, 11, 13, 15, 17 வயதுக்குட்பட்ட பிரிவுகளில், ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி போட்டிகளாக நடந்தன. பெண்களுக்கு நான்கு சுற்றுகளும், ஆண்களில் 9, 11, 13 வயதுடையோருக்கு ஐந்து சுற்றுகளும் என, போட்டிகள் நடந்தன. இவற்றில், ஒவ்வொரு வயது பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெற்றோருக்கு, ரொக்கப் பரிசுடன், கோப்பைகளும் வழங்கப்பட்டன. மேலும், அடுத்த 13வது இடம் வரை பிடித்த ஆண்களுக்கும், எட்டாம் இடம் வரை பெற்ற பெண்களுக்கும் ஆறுதல் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. முதல் மூன்று இடங்களை கைப்பற்றிய பள்ளிகளுக்கும் வெற்றிக் கோப்பைகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டன.மொத்தமாக 30 பேருக்கு, 50,000 ரூபாய்க்கான ரொக்கப் பரிசுகளும், 105 மாணவர்களுக்கும், 30 பள்ளிகளுக்கும் வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட்டன.வெற்றியாளர்களின் கைகளில் மின்னிய வெற்றிக் கோப்பைகளை, 'பூர்விகா அப்ளையன்சஸ்' நிறுவனம் வழங்கி கவுரவித்தது.

குத்துவிளக்கு ஏற்றி துவக்கம்

செஸ் போட்டிகளை, சென்னை வி.ஐ.டி., பல்கலையின் இணை துணைவேந்தர் டி.தியாகராஜன், 'தினமலர்' நாளிதழின் துணை பொது மேலாளர் சேகர், 'பட்டம்' மாணவர் பதிப்பு இதழின் பொறுப்பாசிரியர் ஆர்.வெங்கடேஷ் மற்றும் போட்டியாளர்களாக வந்த மாணவ - மாணவியரில் சிலர் இணைந்து, குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். பரிசு மழையில் நனைந்தமாணவ - மாணவியர்!அனைத்து பிரிவுகளிலும் முதல் பரிசை பெற்ற வீரர் - வீராங்கனைக்கு, தலா 2,500 ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் வெற்றிக் கோப்பைகள் வழங்கப்பட்டன.

வெற்றியாளர்கள்

ஒன்பது வயது பிரிவில் ஹர்ஷவர்தன் மேகநாதன் மற்றும் பெனிடா மேபெல்; 11 வயது பிரிவில் ஷாவுன் மேத்யூ மற்றும் ஆயுஷி தினேஷ்; 13 வயது பிரிவில் தர்ஷன் மற்றும் தன்யா; 15 வயது பிரிவில் லுாகேஷ் மற்றும் சாகனபிரியா; 17 வயது பிரிவில் பாலா சஞ்சய் மற்றும் சாதனா ஆகியோர் முதலிடம் பிடித்து, சாதனை படைத்தனர்.

இரண்டாம் இடம்

அதேபோல், 9 வயது பிரிவில் துஷ்யந்த் மற்றும் அருஷி தினேஷ்; 11 வயது பிரிவில் சஞ்சீவ் மற்றும் ஹர்ஷிதா ரமேஷ்; 13 வயது பிரிவில் ரோஷன் மற்றும் மிருணாலினி; 15 வயது பிரிவில் தக் ஷின் மணிகண்டன் மற்றும் ஸ்ரீ கனிஷ்கா; 17 வயது பிரிவில் விஸ்வமான்யன் வினோத் மற்றும் நிதிலா ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்தனர். இவர்கள் அனைவரும், தலா 1,500 ரூபாய்க்கான ரொக்கப் பரிசு மற்றும் கோப்பைகளை பெற்றனர்.மேலும், ௯ வயது பிரிவில் கீர்த்திக் விஜயபாஸ்கர், சியனா; 11 வயது பிரிவில் விஷ்வா, ஸ்ரீகிருபா ஸ்ரீராம்; 13 வயது பிரிவில் ஷரத், தன்ஷிகா; 15 வயது பிரிவில் பிரசன்னா, ஜமுனா ராணி; 17 வயது பிரிவில் காவியன், மிருதுளாஸ்ரீ ஆகியோர், மூன்றாம் பரிசுகளை பெற்றனர். இவர்களுக்கு, தலா 1,000 ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.'பண்புகளை வளர்க்கும் விளையாட்டு!'நிகழ்ச்சியில், சென்னை வி.ஐ.டி., பல்கலை இணை துணைவேந்தர் டி.தியாகராஜன் பேசியதாவது: எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே; அவர் நல்லவராவதும், வல்லவராவதும் பெற்றோர் வளர்ப்பினிலே என்பதற்கு இணங்க, இங்கு, 9 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மட்டுமே, அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் பங்கேற்கின்றனர். இதற்கு, பெற்றோரின் கடும் உழைப்பும், ஊக்கப்படுத்தலும் தான் காரணம். இந்த போட்டியில் பங்கேற்க தமிழகம் முழுதும் இருந்து, 200 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் வந்துள்ளனர். அவர்களின் வருகைக்கு ஆசிரியர்களின் ஆர்வமும், திட்டமிடலும் தான் காரணம். இது வெறும் பரிசுக்கான விளையாட்டு அல்ல. இது, சிந்தனை திறன், பொறுமை, விடாமுயற்சி உள்ளிட்ட வாழ்க்கைக்கு தேவையான நற்பண்புகளை வளர்க்கும் விளையாட்டு. இதில், ஒவ்வொரு நகர்வும், அந்த பண்புகளை வெளிப்படுத்தும். இதில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவரும் கவனமாக விளையாடி, அடுத்தடுத்த நிலைகளை அடைய வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.'எந்த நாளிதழும் செய்யாத சாதனை''பட்டம்' மாணவர் பதிப்பின் பொறுப்பாசிரியர் ஆர்.வெங்கடேஷ் பேசியதாவது:நாட்டிலேயே மாநில மொழியில் மாணவர்களுக்காக, தினமும் வெளியாகும் ஒரே இதழ், 'தினமலர்' நாளிதழ் சார்பில் வெளியாகும் 'பட்டம்' மட்டுமே. இதில், மாணவர்களுக்கான பொது அறிவு, பாடங்களின் எளிய விளக்கம் உள்ளிட்ட பகுதிகள் வெளியாகின்றன. கடந்த 2014 முதல் வெளியாகும் இதில், மாணவர்களுடன் நேரடியாக பங்கேற்கும் வகையில் பல நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். நாங்கள், மாநில அளவில், எந்த நாளிதழும் நடத்தாத வகையில், ஒரு செஸ் போட்டியை மாணவர்களுக்காக நடத்த வேண்டும் என, இரண்டாண்டுகளாக கனவு கண்டோம். அந்த கனவு, சென்னை வி.ஐ.டி., பல்கலை வாயிலாக இன்று நிறைவேறி உள்ளது. மாணவர்களுக்கு செஸ் குறித்த அறிவை மேம்படுத்தும் வகையில், 'பலகைப் போர்' என்ற பகுதியை பட்டம் இதழில் வழங்கி வருகிறோம். இன்று, உண்மையான பலகைப் போர் நடக்கிறது. இது இனி ஒவ்வொரு ஆண்டும் நடக்கும். கணிக்கும் திறனையும், கணிதத் திறனையும் வளர்க்கும் சிந்தனை விளையாட்டான சதுரங்கத்தில் பங்கேற்கும் உங்களை வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், 'தினமலர்' நாளிதழின் துணை பொது மேலாளர் சேகர் வரவேற்புரை நிகழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
ஆக 11, 2024 07:41

நீட் பயிற்சி கூட ஏழைகளுக்கு சிறப்பாக வழங்கி திராவிடத்தின் முகத்திரையை கிழிக்கலாம்.


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ