சென்னை : சென்னை, டி.பி.,சத்திரம், ஜோதி அம்மாள் நகர் ஒன்பதாவது தெருவில், குடும்பத்துடன் வசிப்பவர் அமுதா, 30. இவரது வீட்டின் அருகில் கடந்தாண்டு, அதே பகுதியைச் சேர்ந்த சிலர் கஞ்சா புகைத்துள்ளனர்.இதுகுறித்து, டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் அமுதா புகார் அளித்தார். இதன்படி, சம்பவத்தில் ஈடுபட்ட, அதே பகுதியைச் சேர்ந்த சந்தேஷ், 24, என்பவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சிறையில் இருந்து கடந்த மாதம் வெளியே வந்த சந்தோஷ், கூட்டாளிகளுடன் சேர்ந்து, அமுதா வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார்.அப்போது, அமுதாவின் அக்கா கணவரான செந்தில்குமார் என்பவரை கத்தியால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த வழக்கில், மீண்டும் சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், சந்தோஷ் கடந்த 8ம் தேதி, ஜாமினில் வெளிவந்து உள்ளார்.இந்த முன்விரோதத்தில், கூட்டாளிகளுடன் சேர்ந்து, நேற்று முன்தினம் இரவு, காலி மதுபாட்டிலில் பெட்ரோல் நிரப்பி தீயிட்டு, அமுதா வீட்டின் மீது வீசிவிட்டு தப்பியுள்ளார்.சத்தத்துடன் வெடித்த பெட்ரோல் குண்டால், வீட்டின் தடுப்புச் சுவரில் மட்டும் தீப்பிடித்து எரிந்தது. அமுதா குடும்பத்தினர் உயிர் தப்பினர். இதைப் பார்த்த அங்கிருந்தோர், மணலைக் கொட்டி தீயை அணைத்தனர். இதுகுறித்து, டி.பி.சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து, சந்தோஷின் கூட்டளியான கமல், 24, என்பவரை நேற்று கைது செய்தனர். சந்தோஷ் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.