சென்னை:'மோசடி செய்து மேற்கொள்ளப்படும் சொத்து ஆவணங்கள் பதிவை ரத்து செய்ய, மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த புதிய சட்டப்பிரிவு செல்லாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.கடந்த 2022 ஆகஸ்டில், பதிவு சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் செய்தது. இதன்படி, 77ஏ என்ற அந்த சட்டப் பிரிவின்படி, சொத்துக்களின் உரிமையாளர்களுக்கு தெரியாமல், ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி செய்து மேற்கொள்ளப்படும் சொத்து ஆவணங்கள் பதிவை ரத்து செய்ய, மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.இதையடுத்து, மோசடி பத்திரப்பதிவு தொடர்பாக ஏராளமான புகார்கள் பெறப்பட்டன; அந்தப் புகார்கள் குறித்து விளக்கம் அளிக்க, சம்பந்தப்பட்டவர்களுக்கு, மாவட்ட பதிவாளர்கள் தரப்பில் 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இதையடுத்து, ஆயிரக்கணக்கில் பத்திரப்பதிவு கள் ரத்து செய்யப்பட்டன. அதிகாரம் பறிப்பு
இந்நிலையில், அரசின் சட்டத்திருத்தத்தை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. புதிய திருத்தத்தால், சிவில் நீதிமன்றத்துக்கு உள்ள அதிகாரம் பறிக்கப்பட்டு இருப்பதாக மனுக்களில் கூறப்பட்டது. பத்திரப்பதிவுகள் ரத்தை எதிர்த்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மாவட்ட பதிவாளருக்கு வழங்கப்பட்ட அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பியும், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்களை, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:ஆவணங்கள் பதிவை ரத்து செய்ய, எந்த கட்டுப்பாடும், வழிமுறைகளும் இல்லாமல், மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. வழிகாட்டுதல் இன்றி அதிகாரம் வழங்குவது, ஊழலுக்கும், நில அபகரிப்பாளர்களின் பிளாக்மெயிலுக்கும் வழிவகுக்கும். நேர்மையாக சொத்துக்களை வாங்குபவர்களின் உரிமையில் பாதிப்பு ஏற்படும். சட்டப்பிரிவு 77ஏ, மாவட்ட பதிவாளர்களுக்கு தடையற்ற அதிகாரங்களை வழங்குகிறது. அவ்வாறு வழிகாட்டுதல் இல்லாத, தடையற்ற, தன்னிச்சையாக அதிகாரங்களை வழங்கும் சட்டத்தை, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று அறிவிக்க முடியும். சட்டத்தில் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என கூறப்பட்டாலும், பதிவாளருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு எந்த வழிமுறைகளும் இல்லை. தமிழக அரசின் புதிய சட்டப்பிரிவு, சிவில் நீதிமன்றத்தின் இடத்தில் புதிய அமைப்பை உருவாக்குவதாக உள்ளது. இதை அனுமதிக்க முடியாது. தயக்கம் இல்லை
சட்டப்பிரிவு 77ஏயின்படி, மாவட்ட பதிவாளர்கள் பிறப்பித்த சில உத்தரவுகளை பரிசீலிக்கும் போது, அவர்களுக்கு நீதித்துறை அதிகாரத்தை வழங்குவது அறிவுடைமையல்ல. அதனால், பிரிவு 77ஏ, அடிப்படை கொள்கைக்கு முரணாக இருப்பதால், அதை ரத்து செய்ய எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை.பதிவுச் சட்டத்தின் நோக்கம், வரம்பை மீறும் வகையில், சட்டப்பிரிவு 77ஏ இருப்பதால், அந்தப் பிரிவு சட்டவிரோதமானது. இந்தச் சட்டப்பிரிவின் அடிப்படையில், மாவட்ட பதிவாளர்கள் பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.