நாமக்கல் : தமிழகத்தில், 35க்கும் மேற்பட்ட இடங்களில் ஆற்று மணல் எடுக்க சுற்றுச்சூழல் அனுமதி அளித்துள்ளது. இருந்தும், ஓரிரு இடங்களில் மட்டுமே மணல் குவாரிகள் செயல்படுவதால், 'ஆன்லைன்' வாயிலாக முன்பதிவு செய்பவர்களுக்கு உடனுக்குடன் மணல் கிடைப்பதுஇல்லை.நாமக்கல் மாவட்டம், மோகனுார் அடுத்த ஒருவந்துாரில் அரசு மணல் குவாரி செயல்பட்டது.இங்கிருந்து மணல் எடுத்து வரப்பட்டு, வளையப்பட்டி சாலை செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள அரசு மணல் சேமிப்பு கிடங்கில் சேமித்து வைத்து, 'ஆன்லைன்' வாயிலாக விற்பனை செய்யப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரை அடுத்து, 2023 செப்., 12 முதல் மணல் குவாரி தொடர்ந்து செயல்படாமல் நிறுத்தப்பட்டது.இந்நிலையில், மோகனுார் அடுத்த மணப்பள்ளி, கொமாரபாளையம், செங்கப்பள்ளி ஆகிய கிராம பஞ்., பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றில் மணல் கொள்ளை அரங்கேறி வருகிறது.டூ - வீலர்களில் மூட்டை மூட்டையாக எடுத்து வரப்பட்டு, ஒரு இடத்தில் கொட்டி குவிக்கின்றனர். அங்கிருந்து, சரக்கு ஆட்டோ, லாரிகள் வாயிலாக எடுத்து செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக, ஒரு மூட்டைக்கு, 50 முதல், 70 ரூபாய் தரப்படுகிறது. ஒரு யூனிட் மணல், 10,000 -- 15,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.நாமக்கல் மாவட்டம், மணப்பள்ளி, கொமாரபாளையம், செங்கப்பள்ளி, ப.வேலுார் அடுத்த பொத்தனுார், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில், தற்போது, மணல் கடத்தல் அதிகரித்துள்ளது.ஆனால், கனிம கொள்ளையை தடுக்க வேண்டிய வருவாய், கனிம வளம், போலீஸ் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது, இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.