| ADDED : ஆக 21, 2024 01:21 AM
மதுரை:தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை கோரிய வழக்கின் விசாரணையை, கோவில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்விற்கு மாற்றி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.சங்கரன்கோவில் அகில பாரத அய்யப்ப சேவா சங்க கிளை தலைவர் சுப்பிரமணியன் தாக்கல் செய்த பொதுநல மனு:சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் 10ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. இங்கு, 23ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இங்குள்ள ராஜகோபுரம் ஐந்து வண்ணங்களால் ஆனது. இம்முறை ஐந்து வண்ணங்கள் பூச கோரிக்கை விடுத்தோம். அறநிலையத்துறை நிராகரித்து விட்டது.கும்பாபிஷேகத்திற்கு திருப்பணிக்குழு அமைக்கவில்லை. கோவிலில் பல சிற்பங்கள் சேதமடைந்துள்ளன. சமீபத்தில் பெய்த மழையின் போது, கோவிலில் நீர்க்கசிவு ஏற்பட்டது. அரசியல் செல்வாக்குடைய நன்கொடையாளர்களை திருப்திபடுத்தும் நோக்கில் அவசரகதியில் கும்பாபிஷேகம் நடத்த உள்ளனர்.திருப்பணி முழுமையாக முடிந்த பின், கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். அதுவரை கும்பாபிஷேகத்திற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.'இதை கோவில்கள் தொடர்பான வழக்குகளை கையாளும் நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிட, பதிவுத்துறையை மனுதாரர் தரப்பு நாடலாம்' என, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு நேற்று உத்தரவிட்டது.