சென்னை: தமிழகத்தில், 30க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை, பேரூராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக, நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை, கோவை, மதுரை உட்பட 21 மாநகராட்சிகள் உள்ளன. மேலும், திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை ஆகியவற்றையும் மாநகராட்சியாக தரம் உயர்த்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு
அதேபோல், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இதில், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளை தரம் உயர்த்து வதற்கு தேவையான மக்கள்தொகை மற்றும் ஆண்டு வருமானம் போன்ற நிபந்தனைகளை, நகராட்சி நிர்வாகத் துறை தளர்வு செய்துஉள்ளது. அதையடுத்து, எந்தெந்த ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தலாம் என்ற கணக்கெடுப்பு துவங்கப்பட்டுள்ளது. தற்போது, குறைந்தபட்சம் 12,000 முதல் அதிகபட்சம் 40,000 மக்கள்தொகை அடிப்படையில், ஊராட்சிகள் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், அப்பகுதியின் வளர்ச்சி பணிகளுக்காக மக்கள்தொகை எண்ணிக்கை 10,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 10,000 மக்கள் தொகை இருக்கும் ஊராட்சிகளும், பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. வளர்ச்சி பணிகள்
இது குறித்து, நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் 48 சதவீத மக்கள் நகர பகுதிகளில் வசிக்கின்றனர். அதன் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, நகர பகுதிகளை போல், ஊரக பகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். முதல் கட்டமாக, சுற்றுலா தலங்களாக இருக்கும் நகராட்சிகள், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளன. சில பேரூராட்சிகளும் நகராட்சியாக உயர்த்தப்படும். அதேபோல், 30க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை, பேரூராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எந்தெந்த ஊராட்சிகளை தரம் உயர்த்தலாம் என்ற ஆய்வு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.