சென்னை:தமிழகத்தில், 2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணியை பலப்படுத்த, அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக, பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஒருவரை நிறுத்த, மேலிட தலைவர்கள் வியூகம் வகுத்துள்ளனர். இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய, வி.சி., தலைவர் திருமாவளவன், 'தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் வரும் போகும்; ஆனால் ஒருபோதும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் முதல்வராக முடியாது' என்ற ஆதங்கத்தை தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பா.ம.க., தலைவர் அன்புமணி, 'தமிழகத்தில் பட்டியலின சமூகம் பா.ம.க.,வுக்கு ஆதரவு கொடுத்தால், தலித் சமூகத்தை சேர்ந்தவரை முதல்வர் ஆக்குவோம்' என்றார். தமிழகத்தில் தி.மு.க., உட்பட, பல மாநில, தேசிய கட்சிகள், சமூக நீதியை நிலைநாட்டுவதாக வெறும் வாய் வார்த்தையில் தான் பேசுகின்றன. ஆனால் பா.ஜ., மட்டுமே, 2014ல் மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், நாட்டின் மிக உயர்ந்த பதவியான ஜனாதிபதியாக பட்டியலின சமூகத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்தையும், இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததும், பழங்குடியின சமூகத்தை சேர்ந்த திரவுபதி முர்முவையும் ஜனாதிபதி ஆக்கியது. தமிழக பா.ஜ., தலைவராக பட்டியலின சமூகத்தை சேர்ந்த முருகனை நியமித்த பின் தான், தி.மு.க., - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், தங்கள் கட்சியில் பட்டியல் சமூகத்தினருக்கு முக்கியத்துவம் அளிக்க துவங்கின. முருகன், சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும், பா.ஜ., மேலிடம், அவரை மத்திய அமைச்சர் ஆக்கியது. பின், லோக்சபா தேர்தலிலும் தோல்வி அடைந்தபோதும், அவரை மீண்டும் மத்திய அமைச்சராக்கியது. பட்டிலின சமூகத்தினருக்கு பா.ஜ., அளிக்கும் முக்கியத்துவத்தால், தமிழக காங்கிரஸ் தலைவராக, பட்டியல் சமூகத்தை சேர்ந்தவரை, அக்கட்சி நியமித்தது. திருமாவளவன் கருத்துக்கு பின், பா.ஜ.,வில் பட்டியல் சமூகத்தினருக்கு அளிக்கும் முக்கியத்துவம் பற்றி, தமிழக மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர். விரைவில் நடிகர் விஜய் கட்சி துவங்க உள்ளார். வரும் 2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ., தலைமையிலான கூட்டணியை பலப்படுத்தும் நடவடிக்கையில், கட்சி மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது.எனவே, தமிழக சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளாராக பட்டியல் சமூகத்தை சேர்ந்தவரை முன்னிறுத்த, மேலிட தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். இது, தி.மு.க., கூட்டணியில் அதிர்வுகளை உருவாக்கும்; அ.தி.மு.க.,வுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும். பா.ஜ., கூட்டணிக்கு, மேலும் பல கட்சிகள் வரும். இது, பா.ஜ., தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கவும் வழிவகுக்கும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.