சென்னை : ''ராமர் கோவிலை இடிக்கும் எண்ணம் காங்கிரசுக்கு இல்லை; அயோத்தியில் சீதை மற்றும் அனுமனுக்கு கோவில் கட்டுவோம்,'' என, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் கூறினார்.அவரது பேட்டி: 'நான் சாதாரணமாக எல்லா மனிதர்களை போல பிறக்கவில்லை. இயற்கை முறைப்படி நான் பிறக்கவில்லை; நேரடியாக கடவுள் வாயிலாக பிறந்தேன்' என, பிரதமர் மோடி சொல்கிறார். பா.ஜ., ஆட்சிக்கு வராது என்பதால், பிரதமர் மோடி ஏதேதோ பேசி வருகிறார். தரமற்ற நிலக்கரியை தமிழகத்திற்கு அதானி கொடுத்து, 6,000 கோடி ரூபாய் ஊழலை செய்துள்ளார். தமிழர்களை திருடர்கள் என, பிரதமர் மோடி சொல்லி இருக்கிறார். ஒடிசா மாநிலத்தை தமிழர்கள் ஆளக்கூடாது என்றால், பாகிஸ்தானில் பிறந்த அத்வானியை ஏன் இந்தியாவில் துணை பிரதமராக்கினர்?தமிழர்களை சீண்டிப் பார்க்க வேண்டாம். நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம். தமிழர்களை பொறுத்தவரையில், நாட்டின் ஒருமைப்பாடு மீது மிகுந்த நம்பிக்கை உள்ளவர்கள்.'காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ராமர் கோவிலை காங்கிரஸ் இடிக்கும்' என, பிரதமர் பொய் பிரசாரம் செய்கிறார். கோவிலை இடிக்கும் எண்ணம் காங்கிரசுக்கு இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், அயோத்தியில் சீதைக்கும் கோவில் கட்டுவோம்; தேவைப்பட்டால் அனுமனுக்கும் கோவில் கட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
மாட்டிறைச்சி விருந்து
'ஒடிசா புரி ஜெகநாதர் கோவில் பொக்கிஷ அறை சாவி தமிழகத்தில் இருப்பதாக பிரதமர் மோடி பேசினார். ஒரு வாரத்திற்குள் பிரதமர் மன்னிப்பு கோர வேண்டும்; இல்லாவிட்டால், பா.ஜ., அலுவலகத்தை முற்றுகையிடுவோம்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று முன்தினம் அறிவித்தார்.அவருக்கு பதிலடி தரும் வகையில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறுகையில், 'கமலாலயத்திற்கு வரும் தேதியை முன்னரே அறிவித்தால், வரும் 10 பேருக்கும் உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் தமிழர்களுக்கு செய்த துரோகங்கள் குறித்த புத்தகமும் பரிசாக வழங்குவோம்' என்றார். அண்ணாமலைக்கு பதிலடி தரும் வகையில் இளங்கோவன் கூறியதாவது: என்றைக்கு, எப்போது, எத்தனை பேர் வருவோம் என்ற விபரத்தை, மாநில தலைவர் முறைப்படி அறிவிப்பார். அதற்குள் நான் அண்ணாமலைக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். சாப்பாடு செய்யும்போது, மாட்டிறைச்சி உணவு தயார் செய்யுங்கள்; நாங்கள் விரும்பி சாப்பிட தயாராக இருக்கிறோம்.தி.மு.க., காங்கிரஸ் மீது இட்டுக்கட்டி, தமிழர்களுக்கு துரோகம் இழைத்ததாக கூறப்பட்டுள்ள புத்தகத்தை தாருங்கள்; பரவாயில்லை, வாங்கிக் கொள்கிறோம். சொந்த குடும்பத்திற்கு பிரதமர் செய்த துரோகப் புத்தகத்தை நாங்கள் தருகிறோம். அதை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.