மேலும் செய்திகள்
சசிகலா வீட்டை உளவு பார்க்கும் நபர் யார்?
1 hour(s) ago
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
2 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
2 hour(s) ago
சேலம்:சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு ஓட்டு எண்ணிக்கை மையத்தில் இருந்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் பாதியில் ஓட்டம் பிடித்ததால் அதிர்ச்சி அடைந்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., மாவட்ட செயலர்களை அழைத்து, 'டோஸ்' விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின்போது, அ.தி.மு.க., 11 தொகுதிகளில் மூன்றாம் இடத்தையும், கன்னியாகுமரி தொகுதியில் நான்காம் இடமும் பிடித்தது. பா.ஜ., கூட்டணி, 12 தொகுதிகளில், இரண்டாம் இடம் பெற்றுள்ளது. கொங்கு மண்டலத்தில் உள்ள, 10 தொகுதிகளில், நீலகிரி, தர்மபுரி, கோவை மூன்று தொகுதிகளில், அ.தி.மு.க., மூன்றாம் இடத்துக்கு சென்றுள்ளது.நாமக்கல், கள்ளக்குறிச்சி, சேலம் தவிர, மற்ற ஏழு தொகுதிகளில், ஒரு லட்சம் முதல், 2.50 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில், தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. சேலத்தில் இருந்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்.,க்கு இந்த தகவல் அதிர்ச்சியை தந்துள்ளது.ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சிலரை நேரில் அழைத்து, தேர்தல் தோல்வி குறித்து பேசியுள்ளார். தொடர்ந்து, சேலம் மாநகர் மாவட்ட செயலர் உள்ளிட்ட நிர்வாகிகளை அழைத்து, சேலம் லோக்சபா தொகுதியில், மாநகர் பகுதியில் உள்ள வீரபாண்டி, சேலம் வடக்கு, தெற்கு, மேற்கு என, நான்கு தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கை முடிவு பட்டியலை வைத்துக் கொண்டு, இ.பி.எஸ்., கடுமையாக 'டோஸ்' விட்டுள்ளார்.சேலம் லோக்சபா தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்ட செல்வகணபதிக்கு, அ.தி.மு.க.,வினர் சிலர் பழைய பாசத்தில், வெற்றி பெற தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டியதை சுட்டி காட்டி, சிலரது பெயர்களை கூறி அவர்களுக்கு கடும் டோஸ் விட்டுள்ளார். மேலும், சேலம் ஓட்டு எண்ணிக்கை மையத்தில், ஆறு, ஏழாவது சுற்று வரும்போது, அ.தி.மு.க., முகவர்கள் பலர் வெளியே சென்றுள்ளனர். கள்ளக்குறிச்சியில், 15வது சுற்றுக்கு மேல் முகவர்கள் வெளியேறியுள்ளனர் என, கூறி தன் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம், 'கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., ஓட்டுக்களை தக்க வைத்துள்ளது. 'வீக்'கான இடங்களை கண்டறிந்து, தேர்தல் பணியை வேகப்படுத்தியிருந்தால், வெற்றி பெற்றிருக்கலாம். இதே நிலையில் கட்சியினர் இருந்தால், வரும் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது கடினமாக இருக்கும். தி.மு.க., ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி இருந்தபோதும், தி.மு.க., எப்படி வெற்றி பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.,வில் பல்வேறு மாற்றங்களை செய்தால் தான், மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும்' என கூறி, இ.பி.எஸ்., தன் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விலை போன நிர்வாகிகள்
லோக்சபா தேர்தலில் சுணக்கம் காட்டிய நிர்வாகிகள், தேர்தல் பணிகள் மேற்கொள்ளாத இடங்கள், 'விலை'போன நபர்கள், நகரம், ஒன்றியம் வாரியாக அ.தி.மு.க., பெற்ற ஓட்டுக்கள், தி.மு.க., வித்தியாசம் குறித்து, கட்சியில் உள்ள நம்பிக்கையான நிர்வாகிகள் மற்றும் தனியார் அமைப்பு மூலம், 39 தொகுதிக்கும் பட்டியல் தயார் செய்யும்படி, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பட்டியல் பெறப்பட்டு, அதில் உள்ள கட்சியினரிடம் விசாரணை செய்து, புகார் உண்மையாக இருந்தால், அவர்களது கட்சி பதவி பறிப்பு இருக்கும். சில இடங்களில், ஒன்றியம், நகரம் இரண்டாக பிரிக்கவும் கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.சட்டசபை தேர்தலை விட ஓட்டுக்கள் சரிவு
சேலம் லோக்சபா தொகுதியில் சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, இடைப்பாடி, ஓமலுார், வீரபாண்டி ஆகிய, 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், 4 சட்டசபை தொகுதிகள் அ.தி.மு.க. வசமும், ஒரு தொகுதி தி.மு.க., விடமும், ஒரு தொகுதி, அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட, பா.ம.க.,விடமும் உள்ளது.சேலம் மாவட்டம் அ.தி.மு.க. கோட்டை என கூறப்பட்ட நிலையில், இ.பி.எஸ்.,ன் சொந்த மாவட்டத்திற்குள் சேலம் தொகுதி வருகிறது. இதனால் சேலம் தொகுதியை யார் கைப்பற்றுவது என தி.மு.க.,- அ.தி.மு.க., இடையே கடும் போட்டி நிலவியது.லோக்சபா தேர்தலில் தி.மு.க.,- அ.தி.மு.க.,- பா.ம.க.,- நா.த.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் போட்டியிட்டனர். அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் விக்னேஷ் போட்டியிட்டார். ஓட்டு எண்ணிக்கை முடிவில், தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி வெற்றி பெற்றார். இ.பி.எஸ். சொந்த மாவட்டத்திலே அ.தி.மு.க. தொகுதியை இழந்தது கட்சியினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஒவ்வொ-ரு தொதியிலும் கடந்த சட்ட சபை தேர்தலுடன் ஒப்பிடுகையில், தற்போது நடந்த லோக்சபா தேர்தலில் தொ-குதி வாரியாக ஓட்டுகள், அ.தி.மு.க.விற்கு குறைந்து உள்ளது. அதன்படி கடந்த சட்டசபை தேர்தலின் போது இடைப்பாடி தொகுதியில் அ.தி.மு.க., 1 லட்சத்து, 63,154 ஓட்டுக்கள், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், 39,312 ஓட்டுகள் குறைந்து, 1 லட்சத்து 23,842 ஓட்டுக்களும்; ஓமலூரில், 1 லட்சத்து, 42,488 ஓட்டுக்களில் இருந்து, 46,822 குறைந்து, 95,666 ஓட்டுக்கள் பெற்றுள்ளது.கூட்டணியில் வெற்றி பெற்ற பா.ம.க.,விடம் உள்ள சேலம் மேற்கில், 1 லட்சத்து, 5,483 ஓட்டில் இருந்து, 31,536 குறைந்து, 73,947 ஓட்டுக்களும், தி.மு.க.,விடம் உள்ள சேலம் வடக்கில், அப்போதைய அ.தி.மு.க., வேட்பாளர், 85,844 ஓட்டு பெற்றார். அதில் இருந்து, 30,113 குறைந்து, 55,731 ஓட்டுக்களும், சேலம் தெற்கில், 97,506 ஓட்டில் இருந்து, 32,729 குறைந்து, 64,777 ஓட்டுக்களும், வீரபாண்டியில், 1 லட்சத்து, 11,682 ஓட்டில் இருந்து, 32,987 குறைந்து, 78,695 ஓட்டுக்கள் கிடைத்து உள்ளன. இது அக்கட்சி பொதுச்செயலர் இ.பி.எஸ்.,க்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago