சென்னை:லோக்சபா தேர்தல் நாளான நேற்று, தமிழகத்தின் வெப்பநிலை 109 டிகிரி பாரன்ஹீட்டை எட்டியது; 13 இடங்களில் வெயில் சதமடித்தது.நாடு முழுதும் கோடை வெயில் தீவிரமாகியுள்ளது. அதிலும், தமிழகம், புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த வாரம் பல இடங்களில் கோடை மழை பெய்த நிலையில், நேற்று முன்தினம் முதல் மாநிலம் முழுதும் வெயில் வாட்டுகிறது.தமிழகம், புதுச்சேரியில், 40 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. அதனால், பகல் வேளையில் ஓட்டுச்சாவடிகள் வெறிச்சோடின. வெயில் தணிந்ததும், மாலையில் வந்து மக்கள் ஓட்டு போட்டனர்.இந்த ஆண்டு கோடையில் இதுவரை இல்லாத அளவுக்கு, மாநிலத்தில் அதிகபட்சமாக ஈரோடில் 43 டிகிரி செல்ஷியஸ், அதாவது 109 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவானது.நேற்று மாலை நிலவரப்படி, சென்னை, கோவை, மதுரை, பாளையங்கோட்டை, சேலம், திருச்சி, வேலுார் என, 13 நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் வாட்டியது. சென்னை மீனம்பாக்கம் 38; கோவை, பாளையங்கோட்டை, தஞ்சாவூர் 39; திருப்பத்துார் 40; தர்மபுரி, மதுரை, திருச்சி, சேலம், திருத்தணி 41; கரூர் பரமத்தி, வேலுார் 42 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.வரும் நாட்களை பொறுத்தவரை, இன்று முதல் 23ம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.