| ADDED : மார் 25, 2024 03:27 AM
தென்காசி : ''லோக்சபா தேர்தலுக்காக 20 நாட்கள் காப்பு கட்டி கோயிலுக்கு விரதம் இருப்பது போல் தேர்தல் விரதம் இருக்க வேண்டும்,'' என, தென்காசி தொகுதி இலஞ்சியில் தி.மு.க., கூட்டணிகட்சியினர் தேர்தல்ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் வேண்டுகோள் வைத்தார்.அவர் பேசியதாவது: இந்த கூட்டணியை சிதற விடாமல் வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். சட்டசபை தேர்தலில் கூட்டணி இருந்தவர்கள் இந்த லோக்சபா தேர்தலிலும் கூட்டணியில் இருப்பதற்கு இதுதான் காரணம். 40 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் ஜெயிக்கப் போகிறார்கள். சில மாதங்களுக்கு முன் பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்புகள் இருந்தன. ஆனால் கடந்த இரு மாதங்களாக இண்டியா கூட்டணி வெற்றி பெற வாய்ப்புஉள்ளது.முதல்வர் ஸ்டாலின் யாரை அறிவிக்கிறாரோ அவர் தான் அடுத்த பிரதமர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி இருந்த போது அவர் யாரை பிரதமராக சொல்கிறாரோ அவர்தான் பிரதமர் ஆனார். அந்த இடத்தில் தற்போது ஸ்டாலின்உள்ளார்.இந்த பெருமை கூட்டணி கட்சிகளுக்கும் பொருந்தும். மத்திய பா.ஜ., அராஜக ஆட்சியை ஒழிக்க இம்முறை உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்கள். அடுத்த சட்டசபை தேர்தலுக்கு அடிப்படையாக இந்த தேர்தல் இருக்கும்.மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ., வருமானவரித்துறை சோதனை நடத்த உத்தரவிடுகிறது. யாரையும் நிம்மதியாக இருக்க விட விடுவதில்லை. டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை சிறையில் வைத்துள்ளனர். எனவே வரும் 20 நாட்களுக்கு உங்கள் வேலைகளை ஒதுக்கி வையுங்கள். வீடு வீடாக உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டுசேகரியுங்கள் என்றார்.