| ADDED : ஏப் 02, 2024 02:07 AM
ஓமலுார்: சேலம் மாவட்டம், ஓமலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட சக்கரைசெட்டிப்பட்டி ஊராட்சியில் உள்ள நாலுகால் ரயில்வே பாலத்தை போக்குவரத்துக்கு ஏற்ற மாதிரி மேம்பாலம் அல்லது சுரங்கப்பாலம் அமைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச்., 28ல், அப்பகுதி மக்கள் வீடுகள் தோறும் கருப்புக் கொடி ஏற்றி, தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை துவக்கினர்.நேற்று காலை அவர்கள், தங்களது வாக்காளர் அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தை அறிவித்து, ஓமலுார் தாலுகா அலுவலகத்தில் குவிந்தனர். பின், அவர்களிடம் தாசில்தார் ரவிக்குமார், ஓமலுார் பி.டி.ஓ,,க்கள் வாசுதேவபிரபு, நல்லதம்பி பேச்சு நடத்தினர்.அதில், 'தேர்தல் முடிந்ததும் தடுப்பணை, புதிய தார் சாலைகள் அமைத்து தரப்படும். ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, ரயில்வே மேம்பாலம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, எழுத்துப்பூர்வமாக எழுதி கையெழுத்திட்டு வழங்கினர். பின், கிராம மக்கள், வாக்காளர் அட்டையை ஒப்படைக்காமல் கலைந்து சென்றனர்.