சென்னை:'இது வெறும் தேர்தல் களமல்ல; ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய அறப்போர்க்களம்' என, கட்சித் தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவரது கடிதம்:பா.ஜ., ஆட்சியாளர்கள் பொய்கள் சொல்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றனர். பிரதமர், மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என, அத்தனை பேருமே பொய்யை மட்டுமே பிரசாரமாக மேற்கொள்கின்றனர்.சில நாட்களாக, தமிழகத்தின் வாக்காளர்கள் உன்னிப்பாக கவனித்து கொண்டு தான் இருக்கின்றனர். தமிழகத்திற்கு, 10 ஆண்டு கால ஆட்சியில், என்னென்ன திட்டங்களை கொண்டு வந்தோம் என்பதை சொல்வதற்கு எதுவுமில்லை. தி.மு.க.,வை விமர்சிப்பதும், வீண் பழி போடுவதும், தமிழர்களை தீவிரவாதிகள் என சித்தரிப்பதும், பா.ஜ., பிரசாரத்தின் பார்முலாவாக இருக்கிறது.பத்தாண்டு கால பா.ஜ., ஆட்சியில், தமிழகம் எப்படி வஞ்சிக்கப்பட்டுள்ளது என்பதை வீடு வீடாகச் சென்று, ஒவ்வொரு வாக்காளரிடமும் எடுத்து சொல்வோம்.அதற்கு, அ.தி.மு.க., எப்படி துணை போனது என்கிற துரோகத்தையும் மறக்காமல் எடுத்துரைப்போம். தனித்தனியாக நிற்கும் கள்ளக் கூட்டணியின் முகத்திரையை கிழித்திடுவோம். வாட்ஸாப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்களையும், வதந்திகளையும் முறியடிக்கும் வகையில், ஆன்லைன் பிரசாரத்தையும் முனைப்புடன் மேற்கொள்வோம். இது, வெறும் தேர்தல் களமல்ல; ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய அறப்போர்க்களம். இந்த போரில், நாம் வென்றாக வேண்டும்; ஓயாது உழைத்தால் உறுதியான வெற்றி நிச்சயம்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.