சென்னை:தமிழகம் மற்றும் ஆந்திராவை இணைக்கும் திண்டிவனம் - நகரி புதுப்பாதை திட்டத்துக்கு ஒதுக்கிய நிதியை, 350 கோடி ரூபாயில் இருந்து 153 கோடி ரூபாயாக குறைத்திருப்பது பயணியருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.தமிழகத்தில், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வழியாக, ஆந்திராவை இணைக்கும் வகையில், திண்டிவனம் - நகரி புதிய ரயில்பாதை திட்டத்தை, 2006ம் ஆண்டில் ரயில்வே அறிவித்தது.போதிய நிதி ஒதுக்காதது, நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னை ஆகியவற்றால் இந்த திட்டப்பணிகள் பல ஆண்டுகளாக தாமதமாகின. இரு மாநிலங்களை இணைக்கும் ரயில் பாதை திட்டம் என்பதால், முக்கியத்துவம் அளித்து செயல்படுத்த வேண்டும் என, பயணியர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கிடையே, பல ஆண்டுகளுக்கு பின், மத்திய இடைக்கால பட்ஜெட்டில், திண்டிவனம் - நகரி புதுப்பாதை திட்டத்துக்கு, 350 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது, தற்போது, அதை 153 கோடி ரூபாயாக குறைத்திருப்பது, பயணியரிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.15 ஆண்டுகளாக
முன்னேற்றமில்லை
மிகவும் முக்கிய திட்டமாக, திண்டிவனம் - நகரி புதிய ரயில்பாதை திட்டத்தை, இங்கு சுற்றியுள்ள மாவட்ட மக்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். திட்டத்தை அறிவித்து, 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. எந்த முன்னேற்றமும் இல்லை. இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியையும் தற்போது குறைத்துள்ளது வேதனையை ஏற்படுத்தி உள்ளது.- பாஸ்கர்,செயலர், திருவள்ளூர் ரயில் பயணியர் சங்கம்