சென்னை:அரசு துறைகளில் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிபவர்களை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்பது விதி. தி.மு.க., அரசு 2021ல் பொறுப்பேற்றதும், நெடுஞ்சாலைத் துறையில் இயக்குனர், இணை இயக்குனர். உதவி இயக்குனர், கண்காணிப்பு பொறியாளர், கோட்ட பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு, புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் மூன்றாண்டுகளை கடந்த நிலையில், 70க்கும் மேற்பட்ட உதவி கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்டவர்களுக்கு, தற்போது பணியிடமாற்றம் வழங்கப்பட்டு உள்ளது. கோட்ட பொறியாளர்கள், துணை தலைமை பொறியாளர், துணை கண்காணிப்பு பொறியாளர் 44 பேர், பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் அடிப்படையில், புதிய பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குனராக இருந்த சாந்திக்கு, நிபந்தனை அடிப்படையில் பணி ஓய்வு வழங்கப்பட்டு உள்ளது. இவருக்கு பதிலாக, புதிய முதன்மை இயக்குனராக செல்வதுரை நியமிக்கப்பட்டு உள்ளார். நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனராக சரவணன், தமிழக சாலை மேம்பாட்டு திட்ட தலைமை பொறியாளராக சேகர், சென்னை - கன்னியாகுமரி தொழில் தடம் சாலை திட்ட தலைமை பொறியாளராக ஜெபசெல்வின் கிளாட்சன், தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு தலைமை பொறியாளராக செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை, நெடுஞ்சாலைத் துறை செயலர் செல்வராஜ் பிறப்பித்துள்ளார். இது போன்று பணிஇடமாறுதல் உத்தரவை அரசு பிறப்பிக்கும்போது, விடுப்பில் சென்று மீண்டும் பழைய இடத்திலும், அதே பிரிவில் வேறு பணியிலும் சேர்வதற்கு பொறியாளர்கள் முயற்சிப்பர். அதேபோல், புதிய திட்டங்கள் அறிவிப்பட்டு உள்ள இடங்களில் பணி பெறுவதற்கும் பலத்த போட்டி நடக்கும். இம்முறை அதுபோன்று விதிமீறல்கள் நடப்பதை தவிர்ப்பதற்காக, பணியிடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள், பழைய பொறுப்பை ஒப்படைக்கும் அதிகாரிகளின் பெயர்கள், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவின்படி வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இதனால், பணியிடமாற்றம் செய்யப்பட்ட இடத்திற்கு போய், பொறுப்பை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் பொறியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.