உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாறுமாறாக உயர்ந்த காய்கறிகள் விலை கிராம் கணக்கில் வாங்க வேண்டிய சோகம்

தாறுமாறாக உயர்ந்த காய்கறிகள் விலை கிராம் கணக்கில் வாங்க வேண்டிய சோகம்

சென்னை:காய்கறி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால், தங்கத்தை போல கிராம் கணக்கில் அவற்றை வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.தமிழகத்தில் காய்கறி, பழங்கள், மூலிகைகள், வாசனை பொருட்கள், பூக்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள், 39.2 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதன் வாயிலாக, ஆண்டுதோறும், 2.31 கோடி டன் தோட்டக்கலை பொருட்கள் உற்பத்தியாகின்றன.

6.9 லட்சம் ஏக்கர்

பெரம்பலுார், திருச்சி, துாத்துக்குடி, திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களில் சிறிய வெங்காயம்; தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் தக்காளி சாகுபடி நடக்கின்றன. கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்டவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த மாவட்டங்கள் மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளில் கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கை, அவரைக்காய் உள்ளிட்ட பலவகை காய்கறிகள் சாகுபடி நடக்கின்றன. ஆண்டுதோறும், 6.90 லட்சம் ஏக்கரில் காய்கறி சாகுபடி நடந்தாலும், மாநிலத்தின் ஒட்டு மொத்த தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு உற்பத்தி இல்லை. எனவே, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிடம் கையேந்தும் நிலை நீடித்து வருகிறது.

பட்ஜெட் அறிவிப்பு

காய்கறிகள் சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்கு, மத்திய, மாநில அரசுகள் தாராளமாக நிதி வழங்கி வருகின்றன. இதற்காக பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகளாக பல்வேறு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு உள்ளன. இவற்றிற்கு அரசு உத்தரவு பெறப்பட்டு, திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருவதாக தோட்டக்கலை துறையினர் கூறி வருகின்றனர். ஆனாலும், காய்கறிகள் உற்பத்தி அதிகரிக்கவில்லை.தற்போது, தமிழக மாவட்டங்களில் காய்கறி உற்பத்தி முடங்கியுள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து பெறப்படும் காய்கறிகளை வைத்து நிலைமை சமாளிக்கப்பட்டு வருகிறது. வாகன வாடகை, மூட்டை ஏற்றி இறக்கும் கூலி, லாபம் ஆகியவற்றை கணக்கிட்டு, காய்கறிகளை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

பீன்ஸ் 170 ரூபாய்

இது, பொது மக்களுக்கு கட்டுப்படியாகாத விலையாக உள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில், கிலோ வெங்காயம் மற்றும் தக்காளி 50; சிறிய வெங்காயம் 80 ரூபாயையும் தொட்டு விட்டன. கேரட் 80 ரூபாய்க்கும், பீட்ரூட் 60, பீன்ஸ் 170, கத்தரிக்காய் 70, வெண்டைக்காய் 60, பாகற்காய் 60, புடலங்காய் 40, சேனைக் கிழங்கு 90, சேப்பங்கிழங்கு 50, பச்சை மிளகாய் 100, இஞ்சி 150, எலுமிச்சை 120, நுாக்கல் 50, முள்ளங்கி 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.இதனால், கிலோ கணக்கிற்கு பதிலாக, தங்கத்தை போல, 100 கிராம், 200 கிராம் என, காய்கறிகளை வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலைக்கு பொது மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். தேர்தலுக்கு முன், இதுபோன்று காய்கறிகள் விலை ஏறியபோது கட்டுப்படுத்த, தோட்டக்கலை, கூட்டுறவு துறை வாயிலாக மலிவு விலை விற்பனை துவங்கப்பட்டது. ஆனால், லோக்சபா தேர்தல் முடிந்து விட்டதால், அதிகாரிகள் இவ்விஷயத்தில் கண்டும் காணாமல் உள்ளனர். இனியாவது, காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்தவும், அவற்றின் உற்பத்தியை பெருக்கவும், அரசு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

செயலியால் முடங்கியது சாகுபடி?

அ.தி.மு.க., ஆட்சியின் போது, தோட்டக்கலை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் வாரம் தோறும் விவசாயிகளை நேரில் சந்தித்து, சாகுபடிக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது. இதனால், காய்கறிகளின் உற்பத்தி அதிகரித்தது.தற்போது, 'கிரெய்ன்ஸ்' மொபைல் போன் செயலியில், விவசாய நிலங்கள், பயிர்கள் தொடர்பான விவரங்களை பதிவு செய்யும் பணி, தோட்டக்கலை துறையினருக்கு வழங்கப்பட்டு உள்ளது. வருவாய் துறையின் கிராம நிர்வாக அலுவலர்கள் செய்ய வேண்டிய பணி, தோட்டக்கலை துறை தலையில் கட்டப்பட்டு உள்ளது. இப்பணியில் ஈடுபடுவதால், சில மாதங்களாகவே, தோட்டக்கலை துறை அலுவலர்கள், சாகுபடியை அதிகரிப்பதில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவும் காய்கறிகள் உற்பத்தி குறைந்ததற்கு காரணம்.

வாழைப்பழம் விலை உயர்வு

தமிழக காய்கறி மார்க்கெட்டுகள், உழவர் சந்தைகள், பழ மண்டிகளுக்கு தேவையான வாழைக்காய், வாழைப்பழம் போன்றவை, ஈரோடு, சத்தியமங்கலம், திருச்சி, துறையூர், தஞ்சாவூர், துாத்துக்குடி, நெல்லை, மதுரை, விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வருகின்றன.சில வாரங்களாக கோடை மழை பெய்து, அப்போது வீசிய சூறாவளி காற்றால், பல இடங்களில் வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால், விளைச்சல் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, தமிழக மார்க்கெட்டுகளுக்கு தினமும், 250 லாரிகளில் விற்பனைக்கு வந்த வாழைப்பழம், தற்போது, 100 லாரிகளாக சரிந்துள்ளது. இதனால், பழங்களின் விலை உயர்ந்து விட்டது. பூவன் வாழை கிலோ 45 ரூபாய்க்கும், செவ்வாழை 100, ஏலக்கி 70, ரஸ்தாலி 55 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை