கள்ளச்சாராய மரண வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றினால் என்ன?
சென்னை:'தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றிய நிலையில், கள்ளச்சாராய மரணம் குறித்த வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றுவதில் என்ன தவறு?' என, அ.தி.மு.க., சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், கள்ளச்சாராயம் குடித்து பலர் பலியான சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. போலீசுக்கு தெரியும்
இம்மனுக்கள், பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.அ.தி.மு.க., நிர்வாகி இன்பதுரை சார்பில், மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி வாதாடியதாவது:போலீசுக்கு தெரிந்தே கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து கள்ளச்சாராயம் வருவதாகக் கூறப்படுகிறது. சி.பி.ஐ.,யால் மட்டுமே இதை விசாரிக்க முடியும். சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்தினால், தவறு செய்தவர்கள் தப்பி விடுவர்.தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடப்பதாக, குற்றச்சாட்டு மட்டுமே கூறப்பட்டது. அந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனை நடந்ததற்கு ஆதாரமாக, பலரின் மரணங்கள் உள்ளன. எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றுவதில் என்ன தவறு?இவ்வாறு அவர் வாதாடினார். அதிகாரிக்கு தொடர்பு
அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ''தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையில், அப்போதைய அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கு பணம் பட்டுவாடா நடந்ததாக கூறப்பட்டதால், வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது,'' என்றார்.இவ்வழக்கின் விசாரணையை, வரும் 10ம் தேதிக்கு முதல் அமர்வு தள்ளி வைத்தது.