உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம்: ரயில்வே பெண் போலீசாருக்கு பாராட்டு

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம்: ரயில்வே பெண் போலீசாருக்கு பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பெங்களூரில் இருந்து பெரம்பூர் வழியாக பீஹார் சென்ற விரைவு ரயிலில், இளம்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்தது. இருவரும் நலமுடன் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர், மஜாகர் அலி. இவரது மனைவி மேத்தா காத்துன். இத்தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளன. இருவரும் பெங்களூரில் தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தனர்.இதற்கிடையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மேத்தா காத்துன், நான்காவது குழந்தையின் பிரசவத்துக்காக, தன் மூன்று குழந்தைகளுடன் தனியாகவே சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தார்.அதன்படி, பெங்களூரில் இருந்து பீஹார் மாநிலம் தானாபூர் செல்லும் சங்கமித்ரா விரைவு ரயிலில், பொதுப்பெட்டியில் மூன்று குழந்தைகளுடன் ஏறினார்.நேற்று காலை புறப்பட்ட ரயில், காட்பாடி, அரக்கோணம் ரயில் நிலையத்தை கடந்து வந்த போது, மேத்தா காத்துனுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால், அவர் அலறி துடித்தார். அவருக்கு, சக பெண் பயணியர் உதவினர்.மேலும், உதவி எண் வாயிலாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.பெரம்பூர் ரயில்வே காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வேளாங்கண்ணி மற்றும் ரயில்வே காவல் பெண் போலீசார், '108' ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோர் பெரம்பூரில் தயாராக இருந்தனர்.ரயில் பெரம்பூரை நெருங்கிய போது, மேத்தா காத்துனுக்கு பெண் குழந்தை பிறந்தது. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஏற்கனவே தயாராக இருந்த ரயில்வே பெண் போலீசார் விரைந்து சென்று, மேத்தா காத்துனுவையும், பிறந்த குழந்தையையும் பத்திரமாக மீட்டனர்.தொடர்ந்து, இளம்பெண்ணுக்கும், பிறந்த குழந்தைக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.பின், தாய் மற்றும் குழந்தையை ஆம்புலன்சில் ஏற்றி, ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தாயும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.ரயிலில் குழந்தை பிறந்தது தொடர்பாக, மஜாகர் அலிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ரயிலில் குழந்தை பிறந்த உடன் துரிதமாக செயல்பட்ட ரயில்வே போலீசார், 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்களை, பயணியர் வெகுவாக பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ram pollachi
ஜூலை 14, 2024 15:48

குழந்தையின் வாழ்நாள் முழுவதும் இரயிலில் இலவச பயணம் செய்ய அதிரடி உத்தரவு போடுங்க சார். இது தானே இப்போதைய உரிமை குறல்.


Kasimani Baskaran
ஜூலை 14, 2024 04:55

தாயுள்ளத்துக்கு பாராட்டுகள்.