சென்னை: தமிழகத்தில் நில வழிகாட்டி மதிப்புகளை உயர்த்துவதற்கான பணிகள், தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் 2012ல் நில வழிகாட்டி மதிப்புகள் உயர்த்தப்பட்டன. அதில், 2017ல், 33 சதவீதம் குறைக்கப்பட்டது. அதை ரத்து செய்வதாக தமிழக அரசு, 2023ல் அறிவித்தது. பின், சமீபத்திய மாற்றங்களுடன், 2012ல் இருந்த மதிப்புகள் மீண்டும் அமலுக்கு வந்தன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை தொடர்ந்து, 2017 வழிகாட்டி மதிப்புகளை அமல்படுத்த, பதிவுத்துறை முடிவு செய்தது. இதற்காக, விடுபட்ட தெருக்கள், சர்வே எண்களுக்கு புதிய மதிப்புகளை நிர்ணயிக்குமாறு, சார் - பதிவாளர்களுக்கு பதிவுத்துறை உத்தரவிட்டது. இதன்படி, தற்போதைய நிலவரத்தில் இருந்து, 70 சதவீதம் வரை வழிகாட்டி மதிப்புகளை உயர்த்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இதுகுறித்து, சார் - பதிவாளர்கள் கூறியதாவது: விடுபட்ட தெருக்களுக்கு மதிப்பு நிர்ணயிப்பதாக கூறி, அனைத்து சர்வே எண்களுக்கும், பகுதி வகைப்பாடு வாரியாக புதிய மதிப்புகள் நிர்ணயிக்கப்பட்டன. இதற்காக, பதிவுத் துறை இணையதளத்தில் புதிய மென்பொருள் இணைக்கப்பட்டது. ஆனால், இந்த புதிய வழிகாட்டி மதிப்புகளை, மாவட்ட பதிவாளர் நிலையில் இறுதி செய்வதில் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டது. மாவட்ட அளவிலான துணை குழுவிடம், புதிய மதிப்புகளுக்கு ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால், இப்பணிகள் தொய்வடைந்துள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.