உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 57 கார்களை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த வாலிபர் கைது

57 கார்களை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த வாலிபர் கைது

திருவள்ளூர்: கார்களை வாடகைக்கு எடுத்து, பணம் செலுத்தாமல் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்; அவரிடமிருந்த 26 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.திருவள்ளூர் மாவட்டம் பிரையாங்குப்பத்தைச் சேர்ந்தவர் மனோஜ் பிரபாகர், 30. காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுகோட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன், 27. கார் டிரைவர்களான இருவருக்கும் தொழில் ரீதியான பழக்கம் ஏற்பட்டது.இந்நிலையில், மணிகண்டனுக்கு சொந்தமான, 'ஹூண்டாய்' காரை, தினமும் 1,000 என மாதம் 30,000 ரூபாய்க்கு மனோஜ் பிரபாகர் வாடகைக்கு எடுத்துள்ளார். கடந்த ஜனவரி 11ம் தேதி எடுத்த காருக்கு, உரிய வாடகை தராமலும், காரை திரும்ப ஒப்படைக்காமலும் மனோஜ் பிரபாகர் ஏமாற்றி வந்துள்ளார்.இது பற்றி, சக ஓட்டுனர்கள் பலரிடம் மணிகண்டன் விசாரித்துள்ளார். அதில், காரை வாடகைக்கு எடுத்து திரும்ப ஒப்படைக்காமல், மனோஜ் பிரபாகர் பலரை ஏமாற்றி வருவது தெரிய வந்தது.உடனே மப்பேடு போலீசாரிடம், மனோஜ் பிரபாகரின் பித்தலாட்டம் குறித்து மார்ச் 23ல் மணிகண்டன் புகார் அளித்தார்.போலீசார் விசாரணையில், மாதம் 30,000 ரூபாய் வாடகை தருவதாகக் கூறி, மனோஜ் பிரபாகர் பலரை ஏமாற்றி, 57 கார்களை வாடகைக்கு எடுத்தது தெரிய வந்தது.அத்துடன், வாடகைக்கு எடுக்கும் கார்களுக்கு நான்கு மாதம் வரை முறையாக வாடகை தருவது, பின், கார்களை அடமானம் வைப்பது அல்லது விற்பது போன்ற திருட்டுத்தனங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். திருவள்ளூர் டி.எஸ்.பி., அழகேசன் மற்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மப்பேடு பகுதியில் மனோஜ் பிரபாகர் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மப்பேடு இன்ஸ்பெக்டர் ரவிகுமார் மற்றும் போலீசார், மனோஜ் பிரபாகரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணைக்கு பின், 26 கார்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு, 2.53 கோடி ரூபாய் என்று போலீசார் தெரிவித்தனர்.மனோஜ் பிரபாகரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், புழல் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி