சென்னை:தாமதமாக தாக்கல் செய்யும் பதில் மனுவை ஏற்க வேண்டும் என்றால், அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு, 10,000 ரூபாய் செலுத்தும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை சேர்ந்த, ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரியான பேராசிரியர் ஆ.ராமச்சந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'தலைமை வனக்காப்பாளராக பதவி உயர்வு கோரி, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தேன்.'மூன்று மாதங்களில் தேர்வுக்குழு உரிய முடிவெடுக்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது. 2020ல் தலைமை வனக்காப்பாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. 'ஆனால், அதற்குரிய பணப்பலன்களை, பணி ஓய்வுக்கு பின்னும் வழங்க வில்லை. எனவே, 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய, 790 நாட்கள் தாமதமானதை ஏற்கக் கோரி, அரசு தரப்பில், மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு, நீதிபதி சதீஷ்குமார் முன், விசாரணைக்கு வந்தது. ஓய்வுபெற்ற அதிகாரி சார்பில், வழக்கறிஞர் எம்.ரவி ஆஜராகி, ''அரசு தரப்பில் தாமதம் செய்வதால், பணப்பலன்களை பெற முடியவில்லை,'' என்றார்.நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'ஆவணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என, துறை தரப்பில் கூறும் காரணங்கள், திருப்தி அளிக்கவில்லை. 'இருந்தாலும், வழக்கை எதிர்கொள்ள, அரசுக்கு சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். எனவே, அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு 10,000 ரூபாய் செலுத்தும்பட்சத்தில், அரசு மனு ஏற்கப்படும்' என்று கூறியுள்ளார்.