மேலும் செய்திகள்
போலீசாருக்கே இந்த நிலை என்றால்... இபிஎஸ் கேள்வி!
06-Aug-2025
தென்காசி:10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் 17 மருத்துவக் கல்லூரிகள் துவக்கினோம். 4 ஆண்டுகால தி.மு.க., ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட துவக்க முடியாதது ஏன் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி கேள்வி எழுப்பினார். தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நேற்று மாலை அவர் பொது மக்களிடையே பேசியதாவது: ஜூலை 7 ல் எனது எழுச்சி பயணம் தொடங்கியது. கடையநல்லூரில் நான் பார்த்த கூட்டத்தை வேறு எங்கும் பார்க்கவில்லை. தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டுவிட்டது. நேற்று ஒரு போலீஸ் எஸ்.ஐ. கொலை செய்யப்பட்டுள்ளார். கோவையில் போலீஸ் ஸ்டேஷனில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். போலீசுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. இதைப் பற்றி சட்டமன்றத்தில் பேசினேன். ஆனால் முதல்வர் ஸ்டாலின் திறமை இல்லாதவராக இருப்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து யார்டு போல இருந்த தமிழக காவல்துறை இன்று அரசியல் தலையீட்டால் செயலிழந்துள்ளது. காவல்துறையில் பல அதிகார மையங்கள் ஆட்டிப்படைக்கின்றன. குஜராத்திலும் போதைப்பொருள் விற்பனை நடக்கிறதே என காங்.., தலைவர் செல்வபெருந்தகை கேட்கிறார். தமிழக கட்சி தலைவர் ஏன் மற்ற மாநிலங்களைக் குறித்து பேச வேண்டும். அ.தி.மு.க. 31 ஆண்டுகள் ஆட்சி செய்தது. அந்தக் காலங்களில் தமிழகம் அமைதியான மாநிலமாக இருந்தது. தற்போது பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ளதால் சிலர் தவறாக குற்றம் சுமத்துகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் முஸ்லிம்களுக்காக பல நன்மைகள் செய்யப்பட்டன. 2001ல் நோன்புக் கஞ்சி வழங்க அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. நாகூர் தர்காவிற்கு சந்தன கட்டைகள் வழங்கப்பட்டன. ஹஜ் பயண நிதியை ரூ.6 கோடியில் இருந்து 12 கோடியாக உயர்த்தினோம். சென்னையில் ரூ.15 கோடி மதிப்பில் ஹஜ் இல்லம் கட்டப்பட்டது. அப்துல்கலாமுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்கியது அ.தி.மு.க. தான். தி.மு.க. எதிராக வாக்களித்தது. ராமநாதபுரத்தில் அப்துலகலாமின் பெயரில் கல்லூரி துவக்கப்பட்டது.காயிதே மில்லத் நினைவு மணி மண்டபம் கட்டப்பட்டது. சர்ச்களுக்கு புனரமைப்பு நிதி ரூ.5 கோடியாக உயர்த்தினோம். ஜெருசலேம் யாத்திரை தொகையை ரூ.28 ஆயிரத்தில் இருந்து ரூ.38,000 ஆக உயர்த்தினோம். சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டது. 2017--18ல் அரசு பள்ளிகளில் படித்து மருத்துவம் படித்தவர்கள் 9 பேர் மட்டுமே. எங்கள் ஆட்சியில் 17 மருத்துவகல்லுாரிகளை துவக்கினோம். தி.மு.க., ஆட்சியில் ஒன்று கூட இல்லை. “சாவி கொடுத்தால் ஆடும் பொம்மை” போன்று ஸ்டாலின் செயல்படுகிறார். 119 கோடி செலவில் கட்டப்பட்ட தென்காசி கலெக்டர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் திறக்கப்படவில்லை. ஸ்டாலினால் ஒரு கத்திரிக்கோலை எடுத்துக் கூட திறக்க முடியாதா. இவ்வாறு பழனிசாமி பேசினார்.தொடர்ந்து அவர் தென்காசி மாவட்டம் புளியங்குடியிலும் சங்கரன்கோவிலிலும் நடந்த பொதுக்கூட்டங்களில் பேசினார். இரவு ராஜபாளையம் சென்றார்.
06-Aug-2025