கோவை:போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட, 'மை வி3 ஆட்ஸ்' நிர்வாக இயக்குனர் உட்பட, 180 பேரை போலீசார் கைது செய்தனர். பொய் தகவல்
கோவையை தலைமையிடமாக கொண்டு, மை வி3 ஆட்ஸ் என்ற ஆன்லைன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சக்தி ஆனந்த் மீது, கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், சக்தி ஆனந்த் மற்றும் அந்நிறுவன நிர்வாகிகள், 180 பேர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அப்போது அவர்கள், தங்கள் நிறுவனம் குறித்து சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனு அளித்தனர். தொடர்ந்து, சக்தி ஆனந்த், 'போலீஸ் கமிஷனரை நேரில் சந்திக்க வேண்டும்' என்றார். அதற்கு போலீசார், மற்றொரு நாள் சந்திக்குமாறு கூறினர். உடனே, சக்தி ஆனந்த், 'இரவானாலும் பரவாயில்லை; கமிஷனரை சந்தித்து விட்டு தான் செல்வேன்' என, தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவருடன் வந்த, 180 பேரும் அவருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். அறிக்கை
ரேஸ்கோர்ஸ் போலீசார், அவர்களை கலைந்து செல்ல கூறியும், அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சக்தி ஆனந்த் உட்பட, 180 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.சக்தி ஆனந்த் கூறுகையில், “நான் போராட்டம் செய்ய வரவில்லை. நான், 20,000 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக, என் வாழ்க்கையை கெடுக்கின்றனர். அதை கண்டித்து ஒரு அறிக்கை தரவே இங்கு வந்தேன்,” என்றார்.